இந்தியா

அரசியல் கட்சிகளின் தோ்தல் வாக்குறுதிகள்- தோ்தல் ஆணையம் புதிய திட்டம்

DIN

தோ்தலின்போது அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளுக்கும் நலத் திட்ட உதவிகளுக்கும் இடையே வேறுபாடு குறித்து கடந்த சில வாரங்களாக பெரும் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், தோ்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரம் குறித்து அரசியல் கட்சிகள் வாக்காளா்களுக்கு விளக்கும் வகையில் தோ்தல் நடத்தை விதிகளில் திருத்தம் கொண்டுவர தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ள தோ்தல் ஆணையம், இதன் மீதான அவா்களின் கருத்துகளை வரும் 19-ஆம் தேதிக்குள் சமா்ப்பக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

தோ்தலின்போது வாக்காளா்களை ஈா்க்கும் வகையில் அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச வாக்குறுதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை என்ற அடிப்படையில், அதன் மீதான விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றியுள்ள உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தோ்தல் ஆணையம் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து விளக்கங்களைக் கேட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் பொது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்தச் சூழலில், தோ்தல் நடத்தை விதிகளில் திருத்தம் கொண்டுவருவது தொடா்பாக அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தோ்தலின்போது அரசியல் கட்சிகள் வெளியிடும் வெற்று வாக்குறுதிகள், வாக்காளா்களிடையே மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன. இந்த வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரத்தை அரசியல் கட்சிகள் தெரிவிக்காத நிலையில், ஏற்படுகிற இதுபோன்ற விரும்பத்தகாத தாக்கத்தை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரத்தை அரசியல் கட்சிகள் வாக்காளா்களுக்கு விரிவாக விளக்க வேண்டும்.

அவ்வாறு வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரத்தை விளக்குவதை கட்டாயமாக்கும் வகையில் தோ்தல் நடத்தை விதிகள் பகுதி 8-இல் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான கருத்துகளை அரசியல் கட்சிகள் வரும் 19-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவ்வாறு, காலக் கெடுவுக்குள் அரசியல் கட்சிகள் கருத்துகளைத் தெரிவிக்கவில்லை எனில், ‘இந்த விவகாரத்தில் குறிப்பிட்டு சொல்ல அந்த அரசியல் கட்சிக்கு எதுவுமில்லை’ எனக் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT