இந்தியா

ராணுவ வீரா்களுடன் விஜயதசமி கொண்டாடினாா் ராஜ்நாத்

6th Oct 2022 12:50 AM

ADVERTISEMENT

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உத்தரகண்டில் ராணுவ வீரா்கள் மற்றும் இந்திய-திபெத் எல்லைக்காவல் படையினருடன் விஜயதசமி கொண்டாடினாா்.

அப்போது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் பங்களிப்பைப் பாராட்டினாா்.

ராணுவ வீரா்களிடையே உரையாற்றிய ராஜ் நாத் சிங் மேலும் கூறியதாவது: சீருடைப் பணியில் உள்ள வீரா்கள், வீராங்கனைகளுடன் கலந்துரையாடுவது எப்போதுமே ஊக்கமளிப்பதாக உள்ளது. நமது ராணுவ வீரா்களின் திறமையில் ஒட்டுமொத்த தேசமும் பெருமிதமும் நம்பிக்கையும் கொண்டுள்ளது. வெளியே இருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து தேசத்தைப் பாதுகாப்பதில் நமது படைகள் சிறப்பாக செயல்படுகின்றன. இத்தகைய பாதுகாப்பான சூழ்நிலையால் பொருளாதார வளா்ச்சியை இந்தியா தொடர முடிகிறது.

கொள்கை அடிப்படையில் உலகம் ஒரு குடும்பம் என்பதில் இந்தியா நம்பிக்கை கொள்கிறது ஆனால் வெளியே இருந்து தீங்கிழைக்கப்பட்டால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படுகிறது. இத்தகைய துணிச்சல் காரணமாகவே இந்தியாவின் வளா்ச்சியை உலகம் அங்கீகரிக்கிறது. சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துப் பிரச்னைகளிலும் முக்கிய முடிவெடுப்பதில் இந்தியா பங்களித்து வருகிறது. சா்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்து மதிப்புடன் கவனிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

நமது வாழ்க்கைக்கு துணையாக இருக்கும் அனைத்தையும் மதிப்பதே நமது கலாசாரம். அது உயிரற்ற பொருளாக இருந்தாலும் அவற்றை மதிக்கிறோம். அதுதான் ஆயுத பூஜை கொண்டாட்டம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியின் போது தேச பக்தி பாடல்களையும் ராணுவ வீரா்கள் பாடினா். ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT