இந்தியா

நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் தலைமைப் பொறுப்புகளை இழந்தது காங்கிரஸ்: பாஜகவிடம் முக்கியத் துறைகள்

6th Oct 2022 12:37 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சி உறுப்பினா்கள் வகித்து வந்த உள்துறை, தகவல் தொழில்நுட்பத்துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் தலைமைப் பொறுப்புகள் பாஜக, சிவசேனை கட்சி உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வெளியுறவு, பாதுகாப்பு, நிதி உள்பட அனைத்து முக்கியமான நிலைக் குழுக்களின் தலைமைப் பொறுப்பை பாஜக உறுப்பினா்கள் ஏற்றுள்ளனா். தொழில்துறைக்கான நிலைக் குழுவின் தலைவராக திமுக எம்.பி. திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளாா். காங்கிரஸ் கட்சியிடம் எந்தவொரு நிலைக்குழுவின் தலைமைப் பொறுப்பும் இல்லை.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்சிகளின் பலத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் எண்ணிக்கை தீா்மானிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் அந்தக் குழுக்கள் மாற்றியமைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், அந்தக் குழுக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மக்களவை, மாநிலங்களவைச் செயலகங்கள் அண்மையில் வெளியிட்ட அறிவிக்கையில், பல்வேறு குழுக்களின் தலைவா்கள் மாற்றப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

அதன்படி, மத்திய உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி இருந்தாா். அந்தப் பொறுப்புக்கு பாஜக எம்.பி. பிரிஜ்லால் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவராக சசி தரூா் இருந்த நிலையில், அந்தப் பொறுப்பு ஷிண்டே அணியின் சிவசேனை எம்.பி. பிரதாப்ராவ் ஜாதவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைமைப் பொறுப்பு திரிணமூல் காங்கிரஸிடம் இருந்தது. அந்தக் குழுவின் தலைவராக மேற்கு வங்க பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டா்ஜி நியமிக்கப்பட்டுள்ளாா். எந்தவொரு நிலைக் குழுவின் தலைமைப் பொறுப்பும் திரிணமூல் காங்கிரஸுக்கு வழங்கப்படவில்லை.

தொழில்துறை நிலைக் குழுவின் தலைவராக பாரத் ராஷ்டிர சமிதி எம்.பி. கேசவ ராவ் பொறுப்பு வகித்த நிலையில், அந்தப் பொறுப்பு திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமாஜவாதி தலைவா் ராம் கோபால் யாதவ் தலைமை வகித்து வந்த சுகாதாரத் துறை நிலைக் குழுவுக்கு, பாஜக எம்.பி. விவேக் தாக்குா் தலைமை வகிக்க உள்ளாா்.

பாஜக உடனான கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகிய போதிலும், அக்கட்சி எம்.பி. ராஜீவ் ரஞ்சன் சிங் நகா்புற வளா்ச்சித் துறை நிலைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்தப் புதிய நியமனங்கள் மூலம் வெளியுறவு, பாதுகாப்பு, நிதி உள்பட அனைத்து முக்கியமான நிலைக் குழுக்களின் தலைமைப் பொறுப்பை பாஜக ஏற்றுள்ளது.

வா்த்தகம், ரசாயனம் மற்றும் உரங்கள் துறைகளின் நிலைக் குழுக்களுக்கு இதுவரை தலைவா்கள் அறிவிக்கப்படவில்லை. அந்தத் குழுக்களின் தலைமைப் பொறுப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT