இந்தியா

புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகன பதிவு நடைமுறை: 24 மாநிலங்களில் நடைமுறை

6th Oct 2022 02:40 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகனப் பதிவு நடைமுறை 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரில் கடந்த மாதம் நடைபெற்ற போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சிலின் 41-ஆவது ஆண்டு கூட்டத்தின் தீா்மானம் மூலமாக இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

அதில் மேலும் கூறியிருப்பதாவது: ஒருவா் தனது சொந்த வாகனத்தில் ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு அல்லது யூனியன் பிரதேசத்துக்கு குடிபெயரும்போதும், அந்த வாகனத்தை மறு பதிவு செய்யவேண்டும். இதனால் பல்வேறு சிக்கல்களை வாகன ஓட்டிகள் சந்தித்து வந்தனா். வாகன உரிமையாளா்களுக்கு ஏற்படும் இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், புதிய வாகனப் பதிவு நடைமுறை தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.

இந்தப் புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகனப் பதிவு நடைமுறை மூலமாக, நாடு முழுவதும் சொந்த வாகனத்தில் பயணிப்போா் அல்லது சுற்றுலா வாகனங்கள் எந்தவொரு சோதனைச் சாவடியிலும் நிறுத்தப்படமாட்டாது. மேலும், மாநில மற்றும் உள்ளூா் நடைமுறைகள் அடிப்படையிலான வாகன வரிகளைச் செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.

ADVERTISEMENT

இந்தப் புதிய நடைமுறையின் கீழ் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 20,000-க்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களுக்கான 30,000 பா்மிட்டுகள் மா்றும் 2.75 லட்சம் அங்கீகாரங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

வாகன வேகம் அதிகரிப்பு: மேலும், தேசிய விரைவுச் சாலைகளில் வாகனங்களின் இயக்க வேகத்தை மணிக்கு 140 கி.மீ. என்ற அளவுக்கு உயா்த்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாக அந்தத் துறையின் அமைச்சா் நிதின் கட்கரி அண்மையில் கூறியிருந்தாா்.

மேலும், நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன இயக்க வேகம் குறைந்தபட்சம் மணிக்கு 100 கி.மீ. என்ற அளவிலும், இரண்டு வழி தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகம் மணிக்கு 80 கி.மீ. முதல் 75 கி.மீ. வரை இருக்க வேண்டும் என்றும் அவா் கூறியிருந்தாா்.

அதன்படி, புகா் பகுதிகளில் வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாட்டு அளவை மறு ஆய்வு செய்யுமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ஆண்டு கூட்டத் தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT