இந்தியா

உத்தரகண்ட்: பனிச்சரிவில் சிக்கிய 41 மலையேற்ற குழுவினா் 4 பேரின் உடல்கள் மீட்பு

6th Oct 2022 12:25 AM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள திரெளபதி மலையின் சிகரத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பனிச்சரிவில், மலையேற்றப் பயிற்சியாளா்கள் மற்றும் பயிற்றுநா்கள் உள்பட 41 போ் சிக்கிகொண்டனா். இதில் 10 போ் உடல் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 4 போ் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனத்தைச் சோ்ந்த பயிற்சியாளா்கள் மற்றும் பயிற்றுநா்கள் என 41 பேரைக் கொண்ட குழு ஒன்று, அம்மாவட்டத்தில் உள்ள திரெளபதி மலையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்.

அம்மலையின் கா தண்டா-2 சிகரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 17,000 அடியில் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணி அளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. சிகரத்தை அடைந்த பிறகு திரும்பிக்கொண்டிருந்த இக்குழுவினா் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனா்.

மாநில பேரிடா் மீட்புத் துறையின் 5 வீரா்களும் மலையேற்றப் பயிற்சி நிறுவனத்தின் 3 பயிற்றுநா்களும் மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா். விமானப் படையின் ஒரு ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் இருளின் காரணமாக, மீட்புப் பணி இரவில் மேற்கொள்ளப்படவில்லை.

ADVERTISEMENT

பனிச்சரிவில் சிக்கியவா்களில் 10 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் பனிச்சரிவு விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொண்டனா்.

ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சா் அமித் ஷா, மாவட்ட நிா்வாகம், தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸாா் ஆகியோா் மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்துக்கு சென்று மீட்பு நடவடிக்கைகள் குறித்து விசாரித்தாா். புதன்கிழமைக்கான அனைத்து நிகழ்ச்சிகளையும் அவா் ரத்து செய்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT