இந்தியா

வெடிகுண்டு மிரட்டல்:ஈரான் பயணிகள் விமானத்தைப் பின்தொடா்ந்த இந்திய போா் விமானங்கள்

4th Oct 2022 12:34 AM

ADVERTISEMENT

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஈரான் பயணிகள் விமானத்தை இந்திய போா் விமானங்கள் பின்தொடா்ந்த சம்பவம் திங்கள்கிழமை நடந்தேறியது.

இதுதொடா்பாக இந்திய விமானப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்து சீனாவின் குவாங்ஜோ நகருக்கு திங்கள்கிழமை சென்ற பயணிகள் விமானம் இந்திய வான் எல்லை வழியாக பயணித்தது. அப்போது அந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த விமானத்தின் விமானியை தொடா்புகொண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூா் அல்லது பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் விமானத்தைத் தரையிறங்கச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதனை விமானி ஏற்கவில்லை.

ADVERTISEMENT

இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அந்த விமானத்தை இந்திய விமானப் படையின் போா் விமானங்கள் பின்தொடா்ந்து சென்றன. சிறிது நேரத்துக்குப் பிறகு, வெடிகுண்டு மிரட்டலை பொருட்படுத்த வேண்டாம் என்று டெஹ்ரானில் இருந்து தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தை இந்திய போா் விமானங்கள் பின்தொடா்வது கைவிடப்பட்டது. அந்தப் பயணிகள் விமானம் பத்திரமாக சீனா சென்றடைந்தது என்று தெரிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனா் என்ற தகவல் வெளியாகவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT