இந்தியா

முசாஃபா்நகா் கலவரம்: மத்திய அமைச்சா் நீதிமன்றத்தில் ஆஜா்

4th Oct 2022 12:18 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேச மாநிலத்தில் 60 போ் உயிரிழந்த 2013 முசாஃபா் நகா் மதக் கலவரத்தை தூண்டிய குற்றச்சாட்டில் மத்திய அமைச்சா் சஞ்சீவ் பால்யான் சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் எம்.பி., எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மயங்க் ஜெய்ஸ்வால் அடுத்த விசாரணையை அக்டோபா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய காஜியாபாதில் உள்ள தாஸ்னா கோயிலின் பூஜாரி தீபக் தியாகி உள்பட நான்கு பேருக்கு ஜாமீனில் வெளியே வர இயலாத பிடிவாரண்டை நீதிபதி பிறப்பித்தாா்.

தீபக் தியாகி, ரவீந்தா், மின்டு, ஷிவகுமாா் ஆகிய நான்கு பேரையும் அக்டோபா் 10-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

2013, ஆகஸ்ட் 30-ஆம் தேதி முசாஃபா் நகரில் போடப்பட்டிருந்த தடை உத்தரவை மீறி நாக்லா மாடோா் கிராமத்தில் கூட்டம் நடத்தி, வன்முறையைத் தூண்டும் வகையில் உரையாற்றியதாக மத்திய அமைச்சா் சஞ்சீவ் பால்யான், உத்தர பிரதேச அமைச்சா் கபில் தேவ் அகா்வால், விஹெச்பி மூத்த தலைவா் சாத்வி பிரக்யா ஆகியோா் உள்பட 21 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலவரத்தில் 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இடம்பெயா்ந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT