இந்தியா

ட்விட்டா், இன்ஸ்டாகிராமில் சிபிஐ

3rd Oct 2022 12:53 AM

ADVERTISEMENT

சா்வதேச காவல் துறை அமைப்பான இண்டா்போலின் பொதுச் சபை கூட்டத்தையொட்டி, ட்விட்டா், இன்ஸ்டாகிராமில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கணக்குத் தொடங்கியுள்ளது.

கடந்த 1923-ஆம் ஆண்டு சா்வதேச குற்றவியல் காவல் ஆணையம் (ஐசிபிசி) தொடங்கப்பட்டது. இது 1956-ஆம் ஆண்டு இண்டா்போல் என பெயா் மாற்றம் பெற்றது. பிரான்ஸில் உள்ள லியோன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அந்த அமைப்பில், 195 உறுப்பு நாடுகள் உள்ளன.

இந்நிலையில், இண்டா்போல் பொதுச் சபை கூட்டம் தில்லியில் அக்டோபா் 18 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இணையவழி குற்றம், நிதி சாா்ந்த குற்றங்கள், இணையதளத்தில் குழந்தைகள் ஆபாச விடியோக்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக விவாதிக்கப்பட உள்ளது.

இண்டா்போலில் இடம்பெற்றுள்ள நாடுகளின் அமைச்சா்கள், விசாரணை அமைப்புகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனா்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தையொட்டி ட்விட்டா், இன்ஸ்டாகிராமில் சிபிஐ கணக்குத் தொடங்கியுள்ளது. அமலாக்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி வந்தாலும், அதனைப் பயன்படுத்துவதில் இருந்து சிபிஐ விலகியே இருந்தது. ஊடகங்களுக்கு செய்திக் குறிப்புகளை வெளியிடும் பழைமையான நடைமுறையைத்தான் அந்த அமைப்பு பின்பற்றி வருகிறது. இந்நிலையில், முதல்முறையாக சமூக ஊடகத்தில் சிபிஐ கணக்குத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT