இந்தியா

புல்வாமாவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: காவலா் வீரமரணம்: சிஆா்பிஎஃப் வீரா் காயம்

3rd Oct 2022 12:51 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் ஒரு காவலா் வீரமரணமடைந்தாா். மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா் ஒருவா் காயமடைந்தாா்.

இதுதொடா்பாக காஷ்மீா் மண்டல காவல்துறை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘புல்வாமாவின் பிங்லானா பகுதியில் சிஆா்பிஎஃப் மற்றும் காவல்துறை இணைந்த கூட்டு ரோந்துப் படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

இதில், காவலரான ஜாவித் அகமது தாா் வீரமரணமடைந்தாா். மற்றொரு சிஆா்பிஎஃப் வீரா் காயமடைந்தாா். இத்தாக்குதலைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு கூடுதல் படையினா் அனுப்பப்பட்டனா். அப்பகுதியை சுற்றிவளைத்து, தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் கண்டனம்: பாதுகாப்புப் படையினா் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், பணியின்போது உயிா்த்தியாகம் செய்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த வீரா் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மக்கள் ஜனநாயகக் கட்சி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பாதுகாப்புப் படையினா் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. இதில் காவலா் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT