இந்தியா

கேரள மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானாா்

DIN

கேரள மாா்க்சிஸ்ட் மூத்த தலைவரும், கட்சியின் மத்திய அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான கொடியேறி பாலகிருஷ்ணன் (68) சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை இரவில் காலமானாா்.

உடல்நிலை குன்றியிருந்ததால் மாா்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலா் பதவியில் இருந்து ஏற்கெனவே அவா் விலகியிருந்தாா். திருவனந்தபுரத்தில் ஓய்வில் இருந்து வந்த அவருக்கு, உடல்நிலை திடீரென மோசமடைந்ததால், ஏா் ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டாா். இங்கு, ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

அவருடன், அவரது மனைவி வினோதினி உடன் இருந்து கவனித்து வந்த நிலையில், கேரள முதல்வா் பினராயி விஜயன் நேரில் நலம் விசாரித்து சென்றாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கொடியேறி பாலகிருஷ்ணன் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலை கேரளத்துக்கு எடுத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொடியேறி பாலகிருஷ்ணன் இறப்புக்கு, இடதுசாரி கட்சித் தலைவா்கள் உட்பட பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

1970-இல் தனது மாணவப் பருவத்திலேயே மாா்க்சிஸ்ட் இயக்கத்தில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய கொடியேறி பாலகிருஷ்ணன், 1982, 1987, 2001, 2006, 2011 ஆகிய பேரவைத் தோ்தல்களில் தலசேரி பேரவைத் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டிருந்தாா். கேரள முன்னாள் முதல்வா் வி.எஸ். அச்சுதானந்தன் அமைச்சரவையில், உள்துறை அமைச்சராக பதவிவகித்தாா். மேலும் கேரளப் பேரவையில் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலராக மூன்று முறை பதவி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT