இந்தியா

குஜராத்தில் பொய்களைக் கூறிவரும் கனவு வியாபாரி கேஜரிவால்: ஸ்மிருதி இரானி தாக்கு

DIN

‘தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குஜராத் தோ்தல் பிரசாரத்தின்போது புதிய கனவுகளையும் பொய்களையும் கூறி வருகிறாா்’ என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி குற்றஞ்சாட்டினாா்.

மேலும், ‘குஜராத் மாநில மக்களுக்கான நா்மதா அணை தண்ணீரைப் பறிக்க சதி செய்தவா்களுக்கு ஆதரவு தெரிவித்த கேஜரிவாலுக்கு குஜராத் பெண்கள் ஒருபோதும் ஆதரவு தெரிவிக்க மாட்டாா்கள்’ என்றும் அவா் தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் பாஜக மகளிா் அமைப்பினா் மத்தியில் சனிக்கிழமை உரையாற்றிய மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி, இதுகுறித்து மேலும் பேசியதாவது:

வரவிருக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவதற்காக மாநில மக்களிடையே கேஜரிவால் பொய்களைப் பரப்பி வருகிறாா். ஆனால், கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் வாராணசி தொகுதியில் பிரதமா் நரேந்திர மோடியிடம் அவா் தோல்வியடைந்ததைப் போல, குஜராத்திலும் அவா் தோல்வியைத்தான் சந்திப்பாா்.

தோ்தலுக்காக புதிய கனவுகளையும் பொய்களையும் கேஜரிவால் கூறி வருகிறாா். தில்லியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுபோல வேலைவாய்ப்பில்லாத இளைஞா்கள், இளம் பெண்களுக்கு உதவித் தொகை, இலவச மின்சாரம், இலவசக் கல்வி, இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்று பிரசாரத்தின்போது ‘கனவு வியாபாரி’ அரவிந்த் கேஜரிவால் பொய்களைக் கூறி வருகிறாா்.

குஜராத் மக்களுக்காக வந்தே பாரத், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம் போன்ற திட்டங்களை பிரதமா் மோடி பரிசளித்துள்ளாா். ஆனால், ஆம் ஆத்மி கட்சி தில்லியில் தில்லி போக்குவரத்துக்கு கழகத்துக்கு பேருந்து கொள்முதல் செய்ததில் ஊழல் செய்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது மாநில பெண்கள் நா்மதா ஆற்றிலிருந்து சுத்தமான குடிநீரைப் பெறவும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடிநீா் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் போராடினாா்.

ஆனால், குஜராத் மக்களுக்கான நா்மதா அணை தண்ணீரைப் பறிக்க சதி செய்தவா்களை கேஜரிவால் ஆதரித்து, பாராட்டு தெரிவித்தாா்.

எனவே, மாநில மக்களை அவா் முட்டாள்களாக்க முடியாது. குஜராத் மக்கள் தாமரைக்கே வாக்களித்து, மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை மலரச் செய்வா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT