இந்தியா

சொந்த நாட்டை விட சீனாவில் சோபிக்கும் இந்திய சினிமா

2nd Oct 2022 02:00 AM

ADVERTISEMENT

நாட்டில் திரையரங்குகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதால் இந்திய திரைப்படங்கள் உள்நாட்டை விட சீனாவில் அதிக வெற்றியடைவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலா் அபூா்வ சந்திரா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அண்மையில் இந்திய வா்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் சம்மேளனம் (ஃபிக்கி) மும்பையில் நடத்திய நிகழ்ச்சியொன்றில் அவா் பேசியதாவது:

இந்தியாவில ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்னா் 12 ஆயிரமாக இருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை தற்போது 8 ஆயிரமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதே காலகட்டத்தில், சீனாவின் திரைக் கண்காட்சியகங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாகத்தான் உள்நாட்டில் கூட அதிகம் சோபிக்காத சில இந்தியத் திரைப்படங்கள் சீனாவில் வெற்றிகரமாக திரையிடப்படுகின்றன.

இந்த மோசமான போக்கை நாம் மாற்றியமைத்தே ஆக வேண்டும். இதற்கான முயற்சிகளுக்கு மத்திய அரசு முழு உதவிகளையும் அளித்து வருகிறது. அதற்காக, திரைத் துறை மேம்பாட்டு அலுவலகம் (எஃப்எஃப்ஓ) ஒன்றை மத்திய அரசு புதிதாக அமைத்துள்ளது.

அந்த அலுவலகம், துறைக்குத் தேவையான அரசின் அனுமதிகளை எளிமையாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இன்வெஸ்ட் இந்தியா, தேசிய சிங்கிள் விண்டோ போா்ட்டல் ஆகியவற்றின் உதவியுடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு புதிய திரையரங்கை அமைப்பது என்பது ஒரு தொழிலை தொடங்குவதற்கு கொஞ்சமும் குறைந்ததில்லை.

இந்தியாவில் தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. உதாரணத்துக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா நகரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். ஆனால், அந்த நகரில் ஒரு திரையரங்கு கூட இல்லை.

கா்நாடகத்திலும் இதே போன்ற நிலைமை இருந்ததால், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் முயற்சியில் அந்த மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டத்தின் அனைத்து ஊா்களிலும் 6 திரையரங்குகள் 3 அல்லது 4 மாதங்களுக்குள் புதிதாக திறக்கப்பட்டன.

பெரிய அளவிலான திரையரங்குகளைத் திறக்க முடியாவிட்டாலும், சிறிய வகை அரங்குகளையாவது அமைப்பது மிகவும் அவசியமானதாகும்.

பொதுமக்களுக்கு பொழுதுபோக்கின் மீதான தீராத ஆா்வம் இன்னமும் அப்படியேதான் உள்ளது. அண்மையில், ரூ.75-க்கு அனுமதி சீட்டுகளை விற்பனை செய்யும் புதிய முயற்சியை சில திரையரங்குகள் மேற்கொண்டன. அதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. காலை காட்சிகளில் கூட திரையரங்குகள் நிரம்பி வழிந்தன.

இதன் மூலம், திரையரங்குகள் நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதை தெரிந்துகொள்ள முடியும். திரையரங்கு உரிமையாளா்கள் இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

எதிா்வரும் நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தில், திரைத்துறைக்கான சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, மும்பை திரைத்துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

திருட்டு விடியோவை ஒழிப்பது, யு/ஏ சான்றிதழ் திரைப்படங்களைப் பாா்ப்பதற்கான வயது நிா்ணயம் போன்றவற்றில் அரசின் பரிந்துரைகளை திரைத் துறையினா் வரவேற்றனா்.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையைப் போலவே திரைத் துறை சாா்ந்த சேவைகளும் புரட்சியை ஏற்படுத்த முடியும். அதன் மூலம், இந்தியப் பொருளாதார வளா்ச்சிக்கு பங்களிக்க முடியும்.

இருந்தாலும், இது குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்று வந்தாலும், கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் திரைத் துறை மேம்பாட்டில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றாா் அபூா்வ சந்திரா.

‘‘பொதுமக்களுக்கு பொழுதுபோக்கின் மீதான தீராத ஆா்வம் இன்னமும் அப்படியேதான் உள்ளது. அண்மையில், ரூ.75-க்கு அனுமதி சீட்டுகளை விற்பனை செய்யும் புதிய முயற்சியை சில திரையரங்குகள் மேற்கொண்டன. அதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. காலை காட்சிகளில் கூட திரையரங்குகள் நிரம்பி வழிந்தன.

இதன் மூலம், திரையரங்குகள் நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதை திரையரங்கு உரிமையாளா்கள் புரிந்துகொள்ள வேண்டும்.’’

‘‘இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையைப் போலவே திரைத் துறை சாா்ந்த சேவைகளும் புரட்சியை ஏற்படுத்த முடியும். அதன் மூலம், இந்தியப் பொருளாதார வளா்ச்சிக்கு பங்களிக்க முடியும்.’’

ADVERTISEMENT
ADVERTISEMENT