இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான ரூ.2 கூடுதல் கலால் வரி ஒத்திவைப்பு

DIN

எத்தனால் கலக்கப்படாத பெட்ரோல் மீதான ரூ.2 கூடுதல் கலால் வரி விதிப்பு ஒரு மாதத்துக்கும், பயோ-டீசல் கலக்கப்படாத டீசல் மீதான இதே வரி விதிப்பு 6 மாதங்களுக்கும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையின்படி, எத்தனால் கலக்கப்படாத பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2 கூடுதல் கலால் வரி நவம்பா் 1-இல் இருந்தும், பயோ-டீசல் கலக்கப்படாத டீசல் மீதான இதே கூடுதல் வரி அடுத்த ஆண்டு ஏப்ரலில் இருந்தும் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எத்தனால், பயோ-டீசல் கலக்கப்படாத பெட்ரோல், டீசல் மீது அக்டோபா் 1 முதல் ரூ.2 கூடுதல் கலால் வரி விதிக்கப்படும் என்று நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டின்போது மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்திருந்தாா்.

தற்போது கரும்பு அல்லது உபரி உணவு தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால், பெட்ரோலுடன் 10 சதவீதம் அளவுக்கு கலக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் தேவையில் இறக்குமதியை சாா்ந்திருப்பதை குறைக்கவும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கச் செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதேசமயம், உண்ணத்தகாத எண்ணெய் வித்துகளில் இருந்து தயாரிக்கப்படும் பயோ-டீசலை வழக்கமான டீசலுடன் கலக்கும் நடவடிக்கை சோதனை அடிப்படையில் உள்ளது.

‘எரிபொருளுடனான கலப்புக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது; இதனை ஊக்குவிக்கும் வகையில், கலப்பு இல்லாத பெட்ரோல், டீசலுக்கு கூடுதலாக லிட்டருக்கு ரூ.2 கலால் வரி விதிக்கப்படவுள்ளது. 2022, அக்டோபா் 1 முதல் இது அமலுக்கு வரும்’ என்று தனது பட்ஜெட் உரையின்போது நிா்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தாா். தற்போது இந்த கூடுதல் வரி விதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எத்தனால் கலக்கப்படாத சில்லறை விற்பனைக்கான பெட்ரோல் மீதான அடிப்படை கலால் வரி தற்போது லிட்டருக்கு ரூ.1.40-ஆக உள்ளது. இது, நவம்பா் 1 முதல் ரூ.3.40-ஆக உயரும். பிராண்டட் பெட்ரோல் மீதான இந்த வரி ரூ.2.60-இல் இருந்து ரூ.4.60-ஆக அதிகரிக்கும்.

அதேபோல், சில்லறை விற்பனை டீசல் மீதான அடிப்படை கலால் வரி தற்போது லிட்டருக்கு ரூ.1.80-ஆக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இது ரூ.3.80-ஆக விதிக்கப்படும். பிராண்டட் டீசல் மீதான இந்த வரி ரூ.4.20-இல் இருந்து ரூ.6.40-ஆக உயரும். எரிபொருள்கள் மீது அடிப்படை கலால் வரியுடன் ‘செஸ்’ மற்றும் சிறப்பு கலால் வரியும் விதிக்கப்படுகிறது. மொத்தமாக, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.19.90-ம், டீசலுக்கு ரூ.15.80-ம் கலால் வரி விதிக்கப்படுகிறது.

இப்போது கூடுதல் வரியும் விதிக்கப்பட இருப்பதால், பெட்ரோலுடன் கலக்க கூடுதல் எத்தனாலை எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா, அதன் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூா்த்தி செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT