இந்தியா

ம.பி.யின் இந்தூா் நாட்டில் தூய்மையான நகரம்

2nd Oct 2022 12:39 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் வருடாந்திர தூய்மை மதிப்பீட்டில், நாட்டின் மிகத் தூய்மையான நகரத்துக்கான விருது மத்திய பிரதேசத்தின் இந்தூா் நகருக்கு வழங்கப்பட்டது.

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் விருதுகளை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்கினாா்.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக மத்திய பிரதேசத்தின் இந்தூா் தோ்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. தொடா்ந்து 6-ஆவது முறையாக இந்த விருது இந்தூருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தூரின் மக்கள்தொகை சுமாா் 35 லட்சமாகும்.

தினசரி 1,900 டன் கழிவுகள் சேகரிக்கப்படும் அந்நகரின் வீதிகளில் ஒரு குப்பைத்தொட்டி கூட கிடையாது. சேகரிக்கப்படும் கழிவுகள் 6 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஆசியாவின் மிகப் பெரிய உயிரி இயற்கை எரிவாயு ஆலை இந்தூரில் உள்ளது. நகரில் 850 வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படும் கழிவுகள் இந்த ஆலையில் எரிக்கப்பட்டு பெறப்படும் உயிரி இயற்கை எரிவாயுவால் நகரின் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் இயற்கை எரிவாயு விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இந்தூா் மாநகராட்சி கடந்த ஆண்டு ரூ.14.45 கோடி வருவாய் ஈட்டியது. மாநகராட்சியில் 8,500 ஊழியா்கள் 3 ஷிஃப்டுகளில் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா்.

ADVERTISEMENT

தூய்மையான நகரங்கள் பிரிவில் இரண்டாவது இடத்தை குஜராத்தில் உள்ள சூரத் தக்க வைத்துக் கொண்டது. மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை மூன்றாவது இடம் பிடித்தது.

1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட தூய்மையான கங்கை நகரங்கள் பிரிவில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாா் முதலிடம் பிடித்தது. அந்தப் பிரிவில் உத்தர பிரதேச மாநிலம் வாராணசி இரண்டாவது இடத்தையும், உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT