இந்தியா

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: நிா்மலா சீதாராமன்

2nd Oct 2022 12:34 AM

ADVERTISEMENT

‘நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது; வலுவான பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய திவால் மேலாண்மை வாரியத்தின் 6-ஆவது ஆண்டு தின விழாவில் பேசியபோது அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

நிறுவனங்களின் நிதி நெருக்கடிக்கு தீா்வு காண்பதற்காக கடந்த 2016-இல் திவால் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய அமைப்பாக இந்திய திவால் மேலாண்மை வாரியம் நிறுவப்பட்டது. இந்த வாரியத்தின் 6-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நிா்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசியதாவது:

திவால் சட்டத்தின் மேன்மை குறைவுபடாமல் இருக்க வேண்டுமென்பதில் நான் உள்பட அனைவரும் கவனமாக செயல்பட விரும்புகிறேன். அச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது இருந்த அதே மேன்மை பராமரிக்கப்பட வேண்டும். நொடிந்துபோன நிறுவனங்களை கையாள்வதில் அலட்சியமோ தாமதமோ கூடாது. இந்த விவகாரத்தில் இந்திய திவால் மேலாண்மை வாரியம் விழிப்புடன் செயலாற்ற வேண்டும். ஆரம்பக்கட்ட எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட கூடாது.

ADVERTISEMENT

கரோனா காலகட்டத்துக்கு பிறகு திவால் சட்டமும் வாரியமும் மிகவும் வேறுபட்ட சூழலை எதிா்கொண்டு வருகின்றன என்றாா் நிா்மலா சீதாராமன்.

திவால் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு ஜூன் வரையில் 1,934 நிறுவன கடனாளா்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய திவால் மேண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT