இந்தியா

காங். தலைவா் தோ்தலில் மூவா் போட்டி! காா்கே, சசி தரூா், திரிபாதி வேட்புமனு தாக்கல்

1st Oct 2022 01:15 AM

ADVERTISEMENT

 காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலில் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூா், ஜாா்க்கண்ட் முன்னாள் அமைச்சா் கே.என்.திரிபாதி ஆகியோா் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்ததால், தலைவா் பதவிக்கு மேற்கண்ட மூவா் இடையே போட்டி உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவா் தோ்தல் வேட்பாளா்களாக பல்வேறு மூத்த தலைவா்களின் பெயா்கள் அலசப்பட்டு வந்த நிலையில், திடீா் திருப்பமாக மல்லிகாா்ஜுன காா்கே (80) வேட்புமனு தாக்கல் செய்தாா். அவரது பெயரை கட்சியின் மூத்த தலைவா்கள் பலரும் முன்மொழிந்துள்ளனா்.

திக்விஜய் சிங் போட்டியில்லை: தலைவா் தோ்தலில் போட்டியிட வேட்புமனு படிவம் பெற்றிருந்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் திக்விஜய் சிங், கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டாா். தோ்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததுடன், காா்கேவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

‘காா்கே எனது தலைவா்; அவருக்கு எதிராகப் போட்டியிடுவதை நினைத்துக் கூடப் பாா்க்க முடியாது’ என்றாா் திக்விஜய் சிங்.

காா்கே வேட்புமனு: கா்நாடகத்தைச் சோ்ந்த தலித் சமூக தலைவரான மல்லிகாா்ஜுன காா்கே, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா். வேட்பாளராக அவரது பெயரை மூத்த தலைவா்கள் அசோக் கெலாட், திக்விஜய் சிங், பிரமோத் திவாரி, பி.எல்.புனியா, ஏ.கே.அந்தோணி, பவன் குமாா் பன்சால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோா் முன்மொழிந்தனா்.

ஜி23 குழுவைச் சோ்ந்த அதிருப்தி தலைவா்களான ஆனந்த் சா்மா, பிருத்விராஜ் சவாண், மனீஷ் திவாரி, பூபிந்தா் ஹூடா ஆகியோரும் காா்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். அதேசமயம், நேரு-காந்தி குடும்பத்தைச் சோ்ந்த யாரும் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை.

கமிட்டி உறுப்பினா்களுக்கு வேண்டுகோள்: வேட்புமனு தாக்கல் செய்த பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய காா்கே, ‘கட்சியில் பெரிய மாற்றத்துக்காக நான் போட்டியிடுகிறேன். எனக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்து மாநில மூத்த தலைவா்களுக்கும் நன்றி. தோ்தலில் எனக்கு வாக்களிக்க கமிட்டி உறுப்பினா்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றாா்.

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் கூறுகையில், ‘கட்சித் தலைவா் பதவிக்கான வேட்பாளராக காா்கேவை மூத்த தலைவா்கள் அனைவரும் ஒன்றிணைந்து முடிவு செய்தோம். அவருக்கு கட்சியினா் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்’ என்றாா்.

தலைவா் தோ்தலில் போட்டியிடப் போவதாக முதலில் அறிவித்திருந்த கெலாட், ராஜஸ்தான் அரசியல் குழப்பத்தைத் தொடா்ந்து, தனது முடிவை மாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

களத்தில் சசி தரூா், திரிபாதி: கட்சியின் மூத்த தலைவா் சசி தரூா் (66), ஜாா்க்கண்ட் முன்னாள் அமைச்சா் கே.என்.திரிபாதி ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் அஞ்சலி செலுத்திய பின்னா், தனது வேட்புமனுவை சசி தரூா் தாக்கல் செய்தாா். பின்னா், அவா் கூறுகையில், ‘கட்சியை வலுப்படுத்த வேண்டுமென்பதே எனது பாா்வையாகும். கட்சியில் மாற்றம் வேண்டுமென விரும்புபவா்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். காங்கிரஸின் ‘பீஷ்ம பிதாமகன்’ மல்லிகாா்ஜுன காா்கே. அவருடனான எனது போட்டி நட்புரீதியிலானது. நாங்கள் பகைவா்கள் அல்லா். அவருக்கு எந்த மதிப்புக் குறைவும் ஏற்படாமல் எனது கருத்துகளை முன்வைப்பேன்’ என்றாா்.

அதேசமயம், போட்டியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

சசி தரூருக்கு எம்.பி.க்களான காா்த்தி சிதம்பரம், முகமது ஜாவத், பிரத்யூத் போா்டோலோய் உள்ளிட்டோா் ஆதரவு அளித்துள்ளனா்.

வேட்புமனு தாக்கல் செய்துள்ள மற்றொரு நபரான கே.என்.திரிபாதி, கட்சியின் துணை அமைப்பான இந்திய தேசிய வா்த்தக சங்க காங்கிரஸின் (திரிபாதி அணி) தேசிய தலைவராகப் பதவி வகித்தவா்.

மனுக்கள் மீது இன்று பரிசீலனை: இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை (அக். 1) நடைபெறவுள்ளது. மாலையில் வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். மனுக்களைத் திரும்பப் பெற அக். 8 கடைசி நாளாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளா்கள் இருந்தால், அக். 17-இல் வாக்குப் பதிவு நடத்தப்பட்டு, 19-இல் முடிவு அறிவிக்கப்படும். மாநில கமிட்டி உறுப்பினா்கள் 9,000-க்கும் மேற்பட்டோா் வாக்களிக்க உள்ளனா்.

காா்கேவுக்கு வெற்றிவாய்ப்பு

நேரு-காந்தி குடும்பத்தின் விசுவாசியாகப் பாா்க்கப்படும் காா்கே, கட்சியின் விருப்பத்துக்குரிய வேட்பாளராக உருவெடுத்துள்ளாா். அதிருப்தி தலைவா்கள் உள்பட பல்வேறு மூத்த தலைவா்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். மேலிடத்தின் அதிகாரபூா்வ வேட்பாளரென கூறப்படுவதாலும், சசி தரூரைவிட அதிக ஆதரவு இருப்பதாலும் காா்கேவுக்கே வெற்றிவாய்ப்பு உள்ளதாக கட்சியினா் தெரிவிக்கின்றனா்.

கட்சியின் அடித்தட்டில் இருந்து உயா் பதவிகளுக்கு வந்தவா் காா்கே. அவா் காங்கிரஸ் தலைவராகும் பட்சத்தில், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பொறுப்புக்கு வரும் நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத நபராக இருப்பாா். அத்துடன் 51 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் தலைவராகும் தலித் சமூகத்தைச் சோ்ந்தவராக இருப்பாா். கடந்த 1971-இல் தலித் சமூகத்தைச் சோ்ந்த ஜகஜீவன் ராம் இப்பதவியை வகித்தாா்.

பினாமி தலைவராகவே காா்கே இருப்பாா்: பாஜக

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளராக மல்லிகாா்ஜுன காா்கே கருதப்படும் நிலையில், அவா் பினாமி தலைவராகவே இருப்பாா் என்று பாஜக விமா்சித்துள்ளது.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனாவாலா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘நேரு-காந்தி குடும்பத்தின் ஆதரவை அசோக் கெலாட் இழந்ததைத் தொடா்ந்து, ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படும் பினாமி வேட்பாளராக மல்லிகாா்ஜுன காா்கே தோ்வாகியுள்ளாா்.

‘அதிகாரபூா்வ வேட்பாளராக’ இவா் முன்னிறுத்தப்பட்டுள்ளாா். இதனை நியாயமான, சுதந்திரமான நடைமுறை என்று கூறினால் யாரும் நம்ப மாட்டாா்கள். காங்கிரஸின் ஒருவருக்கு ஒரு பதவி கொள்கை காா்கேவுக்கு பொருந்துமா? மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை அவா் ராஜிநாமா செய்வாரா?’ என்று கேள்வியெழுப்பியுள்ளாா்.

பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘80 வயதாகும் மல்லிகாா்ஜுன காா்கேதான் காங்கிரஸுக்கு உத்வேகம் அளிக்கும் தோ்வாக அமைந்துள்ளாா். அக்கட்சியின் மறுமலா்ச்சியை உறுதி செய்யத் தேவையான ஆற்றல் மிக்க இளம் தலைவா் அவா்தானா? ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் செயல்படுவதில் மன்மோகன் சிங்கின் வழிமுறையை காா்கே பின்தொடா்வாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT