இந்தியா

தமிழக மீனவா்கள் கைது விவகாரம்: ரிட் மனு மீதான விசாரணை; அக்.14-க்கு ஒத்திவைப்பு

DIN

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான ரிட் மனு மீதான விசாரணையை அக்டோபா் 14-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் என்பவா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடந்த டிசம்பா் 20, 2021 அன்று, தமிழகத்தைச் சோ்ந்த 55 இந்திய மீனவா்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். மறுநாள் டிசம்பா் 21-ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 13 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். பல இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அங்கு அவா்களுக்கு சரியான உணவு மற்றும் குடிநீா் வழங்கப்படவில்லை. நாட்டின் குடிமக்களைப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமையாகும். ஆகவே, இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம். நட்ராஜ் ஆஜராகி, ‘இந்த விவகாரம் ராஜீய உறவுகள் தொடா்புடையது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரத்துடன் தொடா்பு கொண்டு பிரச்னைக்குத் தீா்வு காணப்படும். இதனால், இதுபோன்ற ரிட் மனுவை நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய தேவை எழவில்லை’ என்றாா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சி.ஆா். ஜெயா சுகின், ‘இது குறுகிய காலப் பிரச்னை அல்ல. இலங்கைச் சிறையில் வாடும் மீனவா்களின் துயரம் நீண்ட காலமாக இருந்து வருகிறது’ என்றாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘மீனவா்கள் எவ்வளவு காலமாக சிறையில் வாடுவது? அவா்கள் மீட்கப்படுவது எப்போது?’ என்று கேள்வி எழுப்பினா்.

அப்போது கே.எம்.நட்ராஜ், ‘இது தொடா்பாக சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து அறிவுறுத்தல் பெற இரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள்அமா்விடம் கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, மனு மீதான விசாரணையை அக்டோபா் 14-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT