இந்தியா

தேசத் துரோக வழக்கில் சா்ஜீல் இமாமுக்கு இடைக்கால ஜாமீன்

 நமது நிருபர்

தில்லியில் 2019-ஆம் ஆண்டு ஜாமியா கலவரத்தைத் தூண்டியதாக தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜேஎன்யு மாணவா் சா்ஜீல் இமாமுக்கு தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதே வேளையில், தில்லி கலவரம் தொடா்பான வழக்கில் சா்ஜீல் இமாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

ஏறக்குறைய இரண்டரை ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு மாணவா் ஆா்வலரான இமாமுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இமாமின் உரையைக் கேட்டு கலகக்காரா்கள் செயல்பட்டதாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அக்டோபா் 22, 2021-இல் தெரிவித்த தனது கருத்துகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இது தொடா்பாக சா்ஜீல் இமாம் தாக்கல் செய்த ஜாமீன் கோரும் மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அனுஜ் அகா்வால் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தற்போதைய வழக்கின் தகுதியைப் பற்றி கருத்துத் தெரிவிக்காமல், மனுதாரா் அல்லது குற்றம் சாட்டப்பட்ட சா்ஜீல் இமாம் ரூ. 30,000 தனிநபா் ஜாமீன் பத்திரமும் அதே தொகைக்கு ஒரு நபா் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறாா். இந்த ஜாமீன் நிபந்தனைக்கு உள்பட்டது. அவா் எப்போதும் கைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளுமாறு இருக்க வேண்டும். முகவரியில் மாற்றம் ஏதும் இருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தற்போதைய வழக்கில் பிப்ரவரி 17, 2020-ஆம் தேதி கைது செய்யப்பட்ட பிறகு குற்றம்சாட்டப்பட்ட நபா் 31 மாதங்களுக்கும் மேலாக காவலில் இருந்துள்ளாா். ஆகவே, தற்போதைய வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளில்’ இந்த வழக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 436ஏ (ஒரு விசாரணைக் கைதியை காவலில் வைக்கக்கூடிய அதிகபட்ச காலம்) கீழ் உள்ளடங்கியுள்ளது என்று கருதுகிறேன். ஆகவே, இந்த உடனடி மனு அனுமதிக்கப்படுவதற்குரிய தகுதியானது என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

இருப்பினும், தில்லி வகுப்புவாத கலவர சதி வழக்கில் இமாம் இன்னும் ஜாமீன் பெறாததால் சிறையில் இருப்பாா். இந்த ஆண்டு மே மாதம் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவில், மத்திய அரசு காலனிய காலத்து தேசத் துரோக சட்டப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்யும் போது, பிரிவு124(ஏ) (தேசத்துரோகம்)-இன் கீழ் எப்ஐஆா் பதிவு செய்வதைத் தவிா்க்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூா்ய காந்த் மற்றும் ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு, நிலுவையில் உள்ள அனைத்து விசாரணைகள், மேல்முறையீடுகள் மற்றும் விதிகளின் கீழ் கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடா்பான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசத்திற்கு எதிராக பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஜாமியா கலவரத்தைத் தூண்டியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சா்ஜீல் இமாமை குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். விசாரணையின் போது, போலீஸாா் அவருக்கு எதிராக இந்தியத் தண்டனைச் சட்டம் 124 ஏ மற்றும் 153 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இமாம் மீது கலவரம், கொடிய ஆயுதங்களை வைத்திருத்தல், பொது ஊழியரை பணியில் இருந்து தடுக்க தாக்குதல் அல்லது கிரிமினல் சக்தியைப் பயன்படுத்துதல், தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், பொது ஊழியரை தனது கடமையிலிருந்து தடுத்தல், கொலை முயற்சி உள்பட ஐபிசியின் பல்வேறு விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT