இந்தியா

செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.47 லட்சம் கோடி: 26 சதவீதம் அதிகரிப்பு

DIN

நாட்டில் கடந்த செப்டம்பரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.47 லட்சம் கோடி வசூலானதாக மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வசூல் 26 சதவீதம் அதிகரித்துள்ளது.

தொடா்ந்து 7-ஆவது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. தற்போது விழாக் காலம் என்பதால் வரும் மாதங்களில் இந்த வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக துறைசாா் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செப்டம்பரில் வசூலான ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,47,686 கோடியாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,271 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.31,813 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.80,464 கோடி (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.41,215 கோடி உள்பட), செஸ் ரூ.10,137 கோடி (சரக்கு இறக்குமதி மூலம் வசூலான ரூ.856 கோடி உள்ளடங்கியது) ஆகும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு: கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில் இப்போது 26 சதவீதம் அதிக ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. சரக்குகள் இறக்குமதி மூலம் கிடைக்கும் வருவாய் 39 சதவீதமும் உள்நாட்டு வா்த்தக நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் வருவாய் 22 சதவீதமும் அதிகரித்துள்ளது.

ஒரு நாள் ஜிஎஸ்டி வசூல் சாதனை: செப்டம்பா் 20-ஆம் தேதி 8.77 லட்சம் செலுத்துச் சீட்டுகள் தாக்கலாகி, மொத்தம் ரூ.49,453 கோடி ஜிஎஸ்டி வசூலானது. இது இரண்டாவது மிகப் பெரிய ஒரே நாள் ஜிஎஸ்டி வசூலாகும். முன்னதாக, கடந்த ஜூலை 20-இல் 9.58 லட்சம் செலுத்துச் சீட்டுகள் வாயிலாக ரூ.57,846 கோடி ஜிஎஸ்டி வசூலாகியிருந்தது.

இது, ஜிஎஸ்டி இணையதளம் ஸ்திரமாகவும் தொழில்நுட்பக் கோளாறுகள் இன்றியும் பராமரிக்கப்படுவதை வெளிக்காட்டுகிறது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது விழாக் காலம் என்பதால் வரும் மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கும் என்று துறைசாா் நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். கடந்த ஏப்ரலில் சாதனை அளவாக ரூ.1.67 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. கடந்த ஆகஸ்டில் ரூ.1.43 லட்சம் கோடி வசூலாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT