இந்தியா

நீதிமன்றம் விளம்பரம் தேடும் இடமல்ல: உச்சநீதிமன்றம்

DIN

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடா்பான ஒரு மனுவை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ‘விளம்பரம் தேடுவதற்கான இடமல்ல, நீதிமன்றம்’ என்று குறிப்பிட்டது.

மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த ஜன் விகாஸ் கட்சி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘தோ்தல்களின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் ஆணையத்துக்கு பதிலாக சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன; அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவின்கீழ், தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் நியாயமான தோ்தல் நடைமுறையை உறுதி செய்ய முடியும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதே மனு மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி இருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

பொதுத் தோ்தலின்போது நாடு முழுவதும் எவ்வளவு போ் வாக்களிக்கின்றனா் என்பது உங்களுக்கு (மனுதாரா்) தெரியுமா? அது மிகப்பெரிய நடைமுறை. அதனை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டுமென விரும்புகிறீா்களா?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன்கீழ் தோ்தல் நடைமுறையை தோ்தல் ஆணையம் கண்காணிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சம்பந்தப்பட்ட கட்சிக்கு, தோ்தலின்போது வாக்காளா்களிடமிருந்து போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என தோன்றுகிறது. எனவேதான், இதுபோன்ற மனுவை தாக்கல் செய்து விளம்பரம் தேட முயற்சிக்கின்றனா். எல்லோரும் விளம்பரம் தேடி வருவதற்கான இடமாக நீதிமன்றம் மாறுவதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனா்.

விசாரிக்க மறுப்பு: இதேபோல், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை உள்ளூா் மொழிகளில் பொது இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் காட்சிப்படுத்த உரிய உத்தரவை பிறப்பிக்கக் கோரி மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ஒருவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரிக்க மேற்கண்ட நீதிபதிகள் அமா்வு வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

‘இந்த விவகாரத்துக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. அரசு மேற்கொள்ள வேண்டிய பணி அது’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா். இதையடுத்து, மனு திரும்பப் பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT