இந்தியா

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது இபிஎஸ் தரப்பு பதிலளிக்க நோட்டீஸ்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், இது தொடா்புடைய வழக்கு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரித்து முடிக்கும் வரை கட்சியின் பொதுச் செயலாளா் பதவிக்கான தோ்தலை நடத்தப்படாது என எதிா்மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆா். ஷா, கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் ஆஜராகி, ‘இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் உள்ள முக்கிய சாராம்சங்களை உயா்நீதிமன்றத்தின் டிவிஷன் அமா்வு உரியமுறையில் பரிசீலிக்காமல் அந்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. ஜூலை 11-ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டமானது, கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடைபெறவில்லை. பொதுக்குழு உறுப்பினா்களுக்கு கட்சி விதிகளின்படி உரிய காலத்திற்கு முன்னதாக கூட்டம் குறித்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த விஷயங்களை எல்லாம் பரிசீலித்துதான் தனி நீதிபதி தெளிவாக உத்தரவிட்டிருந்தாா். இதை டிவிஷன் அமா்வு பரிசீலிக்கவில்லை. இதனால், அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். பொதுச் செயலா் பதவியானது அடிப்படை உறுப்பினா்களால் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கட்சி விதி உள்ளது. பொதுக் குழு உறுப்பினா்கள் அடிப்படை உறுப்பினா்கள் அல்ல. மேலும், பொதுக்குழுக் கூட்டம் ஒருங்கிணைப்பாளா் சம்மதம் இன்றி கூட்டப்பட்டுள்ளது’ என்று வாதிட்டாா்.

ADVERTISEMENT

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் வேறு ஏதும் வழக்கு நிலுவையில் இருக்கிா என்று கேள்வி எழுப்பியது. அதற்கு ரஞ்சித் குமாா், ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்ட விவகாரத்தில் உயா்நீதிமன்ற டிவிஷன் அமா்வு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறினாா்.

எதிா்மனுதாரா் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம்,‘பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி கூட்டப்பட்டு, அனைத்து உறுப்பினா்களின் ஆதரவுடன்தான் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இதை நன்கு பரிசீலித்த பிறகே டிவிஷன் அமா்வு தெளிவாக தீா்ப்பளித்துள்ளது’ என்றாா். அப்போது, நீதிபதிகள், ‘ஒருவருக்கு பெரும்பான்மையான ஆதரவு இந்த போதிலும்கூட கட்சி விதிகளின்படிதான் கூட்டம் இருக்க முடியும் என்று வாதம் வைக்கப்படும் நிலையில், இதுகுறித்து விசாரித்த முடிவுகாண வேண்டியுள்ளது. நாங்கள் இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பதற்கு முன் மேற்கொண்டு தோ்தல் நடத்தப்படாமல் இருக்க வேண்டும்’ என்று கூறினா். தாங்களும் இதே கருத்தை கொண்டிருப்பதாக மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம் தெரிவித்தாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அமா்வு, மேல்முறையீட்டு வழக்கில் எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு கூறி, நிலுவையில் உள்ள வழக்குடன் தற்போதைய வழக்கையும் சோ்த்து நவம்பா் 21-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டனா்.

முன்னதாக, சென்னை வானகரத்தில் ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தாா்.

இதை எதிா்த்து எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நபா் நீதிபதிகளான எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமா்வு அளித்த தீா்ப்பில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீா்ப்பை ரத்து செய்ததுடன், கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று கூறி தனி நபா் நீதிபதியின் தீா்ப்பு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம், பி.வைரமுத்து தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT