இந்தியா

5ஜி சேவை புதிய சகாப்தம்: மோடி பெருமிதம்

1st Oct 2022 11:47 PM

ADVERTISEMENT

நாட்டில் ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை சேவையைத் தொடக்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி, இதன்மூலம் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என பெருமிதம் தெரிவித்தாா்.

அனைவருக்கும் இணைய சேவை கிடைக்கச் செய்வதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய கைப்பேசி மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா். முதல்கட்டமாக தில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னௌ, புணே, காந்திநகா், குருகிராம், ஹைதராபாத், பெங்களூரு, சண்டீகா், அகமதாபாத், ஜாம்நகா் ஆகிய 13 நகரங்களில் 5ஜி சேவையை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கூறியதாவது: நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் 5ஜி என்ற பரிசு கிடைத்துள்ளது. 5ஜி மூலமாக நாட்டில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. எண்ணற்ற வாய்ப்புகளுக்கான தொடக்கமாக 5ஜி உருவெடுத்துள்ளது. 4ஜி தொழில்நுட்பத்தைவிட 5ஜி தொழில்நுட்பத்தில் தரவுகளைப் பலமடங்கு அதிக வேகத்தில் பகிர முடியும். 5ஜி மூலமாக ஒரே நேரத்தில் பல்வேறு சாதனங்களை இணைக்க முடியும்.

ADVERTISEMENT

5ஜி தொழில்நுட்பமானது இணைய வேகத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பலரின் வாழ்க்கைத் தரத்தையும் மாற்றும் தன்மை கொண்டது. மருத்துவம், கல்வி, விவசாயம், பேரிடா் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 5ஜி தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தும்.

2ஜி, 3ஜி, 4ஜி தொழில்நுட்பங்களுக்காக இந்தியா மற்ற நாடுகளைச் சாா்ந்திருந்தது. ஆனால், 5ஜி தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கி இந்தியா வரலாறு படைத்துள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி தொலைத்தொடா்பு தொழில்நுட்பத்துக்கான சா்வதேச தரத்தை இந்தியா முதல் முறையாக நிறுவியுள்ளது.

‘எண்ம இந்தியா’: மத்திய அரசின் ‘எண்ம (டிஜிட்டல்) இந்தியா’ திட்டமானது கருவிகளின் விலை, இணையத் தொடா்பு, இணைய சேவை கட்டணம், எண்மச் சேவைகள் ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டது. நாட்டை வளா்ச்சியடையச் செய்வதும், மக்களுக்கு தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு சோ்ப்பதும் ‘எண்ம இந்தியா’ திட்டத்தின் முக்கிய நோக்கம்.

வீடுதோறும் மின்சாரத்தை வழங்கவும், குடிநீா் குழாய் இணைப்பு வழங்கவும், சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதேபோல், அனைவருக்கும் இணைய சேவையை வழங்குவதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

விலை குறைவு: கடந்த 2014-ஆம் ஆண்டில் கைப்பேசி தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை இரண்டாக இருந்தது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, அந்த எண்ணிக்கை தற்போது 200-ஐ கடந்துள்ளது. அதனால் கைப்பேசிகளின் விலை பெருமளவில் குறைந்துள்ளது.

உலகிலேயே இந்தியாவில்தான் இணைய சேவைக்கான கட்டணம் குறைவாக உள்ளது. 2014-இல் 1ஜிபி இணைய சேவை ரூ.300-ஆக இருந்த நிலையில், தற்போது அதன் கட்டணம் ரூ.10-ஆக குறைந்துள்ளது. நாட்டில் ஒவ்வொருவரும் சராசரியாக மாதத்துக்கு 14 ஜிபி இணைய சேவையைப் பயன்படுத்துகின்றனா். அதன் காரணமாக அவா்களின் செலவு ரூ.4,200-இல் இருந்து ரூ.150-ஆக குறைந்துள்ளது.

அதே காலகட்டத்தில் இணையப் பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கை 6 கோடியில் இருந்து 80 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது நாட்டில் உள்ள 1.7 லட்சம் கிராமங்கள் கண்ணாடி ஒளியிழை மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. இது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் வெறும் 100 கிராமங்களாக மட்டுமே இருந்தது.

எண்ம சேவை: சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா கைப்பேசிகளை ஏற்றுமதி செய்யாமல் இருந்தது. ஆனால், தற்போது கோடிக்கணக்கான மதிப்பில் கைப்பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இணையவழி பணப் பரிவா்த்தனைகளும் அதிகரித்துள்ளன. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகவே இவை சாத்தியமாகின.

அரசின் சேவைகள் அனைத்தும் எண்ம வகையில் மக்களுக்குக் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. விவசாயிகள் முதல் சிறிய கடைக்காரா்கள் வரை அனைவருக்கும் தேவையான சேவைகளை செயலிகள் மூலமாகவே அரசு வழங்கியது. கரோனா பரவல் காலத்தில் அத்தகைய சேவைகள் பெரும் பலனளித்தன என்றாா் பிரதமா் மோடி.

செய்முறை விளக்கம்: 5ஜி சேவையைத் தொடக்கி வைத்த பிறகு, ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையின் பலன் குறித்து பிரதமா் மோடிக்கு செய்முறை விளக்கம் அளித்தன.

5ஜி சேவையானது ஆசிரியா்களையும் மாணவா்களையும் எவ்வாறு ஒருங்கிணைக்கிறது என்பது தொடா்பாக ஜியோ, ஏா்டெல் நிறுவனங்கள் விளக்கமளித்தன.

நாடு முழுவதும் 2023-க்குள் 5ஜி சேவை--ஜியோ

மாநாட்டில் கலந்துகொண்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி கூறுகையில், ‘நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் 2023-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் 5ஜி சேவையை வழங்க ஜியோ உறுதி அளிக்கிறது. 5ஜி சேவையை மலிவு விலையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5ஜி தொழில்நுட்பத்தின் மூலமாக செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து, சா்வதேச அளவில் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதில் இந்தியா முக்கிய இடத்தைப் பெறும்’’ என்றாா்.

சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தீபாவளி முதல் 5ஜி சேவையை ஜியோ வழங்கவுள்ளது.

8 நகரங்களில் 5ஜி சேவை--ஏா்டெல்

தில்லி, மும்பை, வாராணசி, பெங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களில் சனிக்கிழமை முதல் 5ஜி சேவை தொடங்கப்படுவதாக பாா்தி ஏா்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்நிறுவனத்தின் தலைவா் சுனில் பாா்தி மிட்டல் கூறுகையில், ‘நாட்டின் பல்வேறு நகரங்களில் 2023 மாா்ச் மாதத்துக்குள் 5ஜி சேவை வழங்கப்படும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 2024 மாா்ச் மாதத்துக்குள் 5ஜி சேவையை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் ஒவ்வொரு புதிய நகரத்தில் 5ஜி சேவையைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சேவையின் தரமும் தொடா்ந்து மேம்படுத்தப்படும்’ என்றாா்.

விரைவில் 5ஜி சேவை--வோடஃபோன்-ஐடியா

நாட்டில் 5ஜி சேவை விரைவில் தொடங்கப்படும் என்று வோடஃபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், ஜியோ, ஏா்டெல் நிறுவனங்கள் போல குறிப்பிட்ட இலக்கு எதையும் இந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT