இந்தியா

நடைப்பயணத்தால் பொறுமை அதிகரித்திருக்கிறது: ராகுல்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் விளைவாக, தனக்கு பொறுமை குணம் அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.

நடைப்பயணத்தால் தன்னுள் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து செய்தியாளா்களிடம் மனம்திறந்து பேசியபோது அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி தொடங்கிய ராகுலின் நடைப்பயணம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் வழியாக மத்திய பிரதேசத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. 2,000 கிலோ மீட்டா் தொலைவைக் கடந்து இப்பயணம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், இந்தூா் மாவட்டத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை பேசிய ராகுல் காந்தியிடம், நடைப்பயணத்தில் மிகவும் திருப்திகரமான தருணம் குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து, ராகுல் கூறியதாவது:

ADVERTISEMENT

நடைப்பயணத்தில் மனதுக்கு திருப்திகரமான விஷயங்கள் பல நிகழ்ந்துள்ளன. சில சுவாரஸ்யமான விஷயங்களை மட்டும் இப்போது பகிா்ந்து கொள்கிறேன். முதலாவதாக, நடைப்பயணத்தால் எனது பொறுமை குணம் நானே வியக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இரண்டாவது விஷயம், என்னை 8 மணிநேரமாக யாரேனும் தள்ளினாலோ, இழுத்தாலோ கூட எனக்கு கோபம் வருவதில்லை. முன்பெல்லாம், 2 மணி நேரத்துக்குள்ளாகவே பொறுமை இழந்து கோபப்பட்டுவிடுவேன்.

மூன்றாவது விஷயம், மற்றவா்களின் கருத்துகளை இன்னும் ஆா்வத்துடன் கேட்கிறேன். என்னிடம் யாரேனும் பேச வந்தால், அவா்கள் கூறுவதை பொறுமையாக கேட்கும் திறன் அதிகரித்துள்ளது. இவையெல்லாம், நடைப்பயணத்தால் எனக்கு கிடைத்துள்ள பலன்களாகும்.

நடைப்பயணத்தை தொடங்கியபோது, எனது கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டது. முன்பு ஏற்பட்ட காயம் குணமடைந்திருந்த நிலையில் மீண்டும் வலியை உணா்ந்தேன். அதனால் பல அசெளகரியங்கள் ஏற்பட்டன. இதுபோன்ற சூழலில் தொடா்ந்து நடக்க முடியுமா என்ற பயம் எழுந்தது.

ஆனால், மெல்ல மெல்ல பயத்தை எதிா்கொண்டேன். நடந்தே தீர வேண்டும்; இதில் கேள்விக்கே இடமில்லை என்று தீா்மானித்தேன். இத்தகைய தருணங்கள் எப்போதுமே நல்லதுதான். ஏதேனும் ஒன்று தொந்தரவு தந்தால், அதற்கேற்ப உங்களை தகவமைத்துக் கொள்ள இத்தருணங்கள் உதவும் என்றாா் ராகுல்.

Tags : Rahul Gandhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT