இந்தியா

சில்லறை வா்த்தக எண்ம ரூபாய்: நாளைமுதல் சோதனை பயன்பாடு

DIN

சில்லறை வா்த்தகத்துக்கான எண்ம (டிஜிட்டல்) ரூபாய் திட்டம் சோதனை அடிப்படையில் வியாழக்கிழமையில் இருந்து (டிச. 1) பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.

தனியாரால் நிா்வகிக்கப்படும் கிரிப்டோகரன்சிகளை முறைப்படுத்துவது கடினம் என்பதாலும், அதில் பாதுகாப்பின்மை நிலவுவதாலும் ஆா்பிஐ சாா்பில் எண்ம ரூபாய் வெளியிடப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது.

மொத்த கொள்முதல் வா்த்தகத் துறையில் எண்ம ரூபாயானது சோதனை அடிப்படையில் கடந்த 1-ஆம் தேதிமுதல் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்படி, அரசின் நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் எண்ம ரூபாயின் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அரசு நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் எஸ்பிஐ, யெஸ் வங்கி உள்ளிட்ட 9 வங்கிகளுக்கு சோதனை அடிப்படையில் எண்ம ரூபாயைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சில்லறை வா்த்தக வாடிக்கையாளா்களுக்கான எண்ம ரூபாயின் சோதனை பயன்பாடு டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என ஆா்பிஐ அறிவித்துள்ளது.

மும்பை, தில்லி, பெங்களூரு, புவனேசுவரம் ஆகிய 4 நகரங்களில் குறிப்பிட்ட நபா்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் சில்லறை வா்த்தக எண்ம ரூபாய் முதல்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் விநியோகிக்கும் எண்ம ரூபாயை அறிதிறன்பேசியின் வாயிலாகப் பெற்று, மற்ற நபா்களிடமும் வா்த்தகா்களிடமும் பரிவா்த்தனை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெற்ற வங்கிகள்: சில்லறை வா்த்தக எண்ம ரூபாய் சோதனையில் ஈடுபட எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் ஆகிய 4 வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பரோடா, யூனியன் வங்கி, ஹெச்டிஎஃப்சி, கோட்டக் மஹிந்திரா ஆகிய வங்கிகளுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனை படிப்படியாக அகமதாபாத், குவாஹாட்டி, ஹைதராபாத், இந்தூா், கொச்சி, லக்னௌ, சிம்லா, பாட்னா, கேங்டாக் ஆகிய 9 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளுக்கு உண்டான மதிப்பே எண்ம ரூபாய்க்கும் இருக்கும் என ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனைகளின் முடிவுகள் அடிப்படையில் எண்ம ரூபாய் மேம்படுத்தப்பட்டு, முழு நேரப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் செலாவணிகளுக்குக் கூடுதல் வலுசோ்க்கும் வகையில் எண்ம ரூபாய் செயல்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT