இந்தியா

ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதம் அச்சுறுத்தலாகத் தொடர்கிறது: தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்

DIN

எல்லை தாண்டிய பயங்கரவாதமும், ஐஎஸ் அமைப்பால் உத்வேகம் பெறும் பயங்கரவாதமும் இன்னமும் ஓர் அச்சுறுத்தலாகத் தொடர்வதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தெரிவித்தார்.
 தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தோனேசிய, இந்திய உலமா, மற்ற மதத் தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நிகழ்வில் அவர் பேசியதாவது:
 இஸ்லாமிய சமூகத்தில் உலமாக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் போன்றவற்றை மேம்படுத்தி பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில் இந்திய, இந்தோனேசிய உலமாக்களை ஈடுபடுத்துவதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.
 இந்தியா, இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளுமே பயங்கரவாதத்தாலும் பிரிவினைவாதத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சவால்களை நாம் கணிசமான அளவுக்கு திறம்பட சமாளித்தபோதிலும், எல்லை தாண்டிய பயங்கரவாதமும் ஐஎஸ் அமைப்பால் உத்வேகம் பெறும் பயங்கரவாதமும் இன்னமும் ஓர் அச்சுறுத்தலாகத் தொடர்கின்றன.
 ஐஎஸ் அமைப்பால் உத்வேகம் பெறும் தனிநபர் பயங்கரவாத அமைப்புகள், சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து நம் நாட்டுக்குத் திரும்பி வருவோர் போன்ற அச்சுறுத்தலை சமாளிக்க சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
 தீவிரவாதச் சிந்தனை பரப்பப்படுவதைத் தடுப்பது அவசியமாகும். ஜனநாயகத்தில் வெறுப்பூட்டும் பேச்சு, அச்சுறுத்துதல், வன்முறை, பூசல், குறுகிய நோக்கங்களுக்காக மதத்தைப் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு
 இடமளிக்கக் கூடாது.
 தீவிரவாதச் சிந்தனை பரப்பப்படுவதன் இலக்காக இளைஞர்கள் உள்ளனர். அவர்களது ஆற்றல் சரியான திசையில் கொண்டுசெல்லப்பட்டால் அவர்களால் சமூகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.
 எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவோரைக் கண்டறியவும், அவர்களின் நடவடிக்கைகளை முறியடிக்க தகவலைப் பகிர்ந்து கொள்ளவும் அரசு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இந்த விவகாரத்தில் உலமாக்கள் முக்கியப் பங்காற்ற முடியும்.
 தொழில்நுட்பம் என்பது மனித சமூகத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தபோதிலும் அதை சமூக விரோத சக்திகள் அழிவு நோக்கங்களுக்கு தவறாகப் பயன்படுத்துகின்றன.
 உலமாக்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் திறன் பெற்றவர்களாக உருவெடுத்து சதித் திட்டங்களையும் வெறுப்பூட்டும் செயல்களையும் முறியடிக்க வேண்டும்.
 பயங்கரவாதச் சிந்தனையைப் பரப்புவது, மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை நியாயப்படுத்தவே முடியாது.
 மதத்தை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்து நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். பயங்கரவாதம், இஸ்லாமிய கோட்பாட்டுக்கு எதிரானது. ஏனெனில் இஸ்லாம் என்பதன் பொருள் அமைதி, நலவாழ்வு ஆகியவையாகும்.
 ஒரு நபரைக் கொலை செய்வது என்பது ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் கொல்வதைப் போன்றதாகும் என்று இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் கூறுகிறது. அதேபோல ஒரு நபரைக் காப்பாற்றுவது என்பது ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் காப்பாற்றுவதைப் போன்றது என்றும் அந்த நூல் கூறுகிறது. ஒருவரின் ஆணவப்போக்கிற்கு எதிராக ஜிஹாத் (புனிதப் போர்) நடத்தப்பட வேண்டுமே தவிர அப்பாவி மக்களுக்கு எதிராக புனிதப் போர் நடத்தப்படக் கூடாது என்று இஸ்லாமிய மதம் தெரிவிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT