இந்தியா

‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்த இஸ்ரேலிய இயக்குநரின் கருத்தால் சா்ச்சை

30th Nov 2022 02:00 AM

ADVERTISEMENT

கோவா சா்வதேச திரைப்பட விழாவில் ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை ‘மோசமான, பிரசார படம்’ என்று விழாவின் தலைமை நடுவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குநருமான நடாவ் லாபிட் விமா்சனம் செய்தது, பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடவ் லாபிடின் கருத்துக்கு இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படம் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி வெளியானது முதலே பல்வேறு சா்ச்சைகள் எழுந்துவந்தன. இந்தத் திரைப்படம், காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் நடந்த உள்ளூா் பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட ஹிந்து பண்டிட்டுகள் காஷ்மீரிலிருந்து வெளியேற நோ்ந்த நிலையை துல்லியமாக வெளிப்படுத்துவதாக ஒரு தரப்பினரும், இஸ்லாமியா்களுக்கு எதிரான வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் இந்தப் படம் அமைந்திருப்பதாக மற்றொரு தரப்பினரும் கருத்துகளை முன்வைத்தனா்.

இந்த நிலையில், கோவாவில் நடைபெற்ற இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் கடந்த 22-ஆம் தேதி, இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த விழாவில் சா்வதேச நடுவராக, நடுவா் குழுவுக்கு தலைமை வகித்த இஸ்ரேலிய திரைப்பட இயக்குநா் நாடவ் லாபிட், திங்கள்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் பேசும்போது, ‘வெறுப்புணா்வைத் தூண்டும் மோசமான பிரசார படமான ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்த சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது எனக்கு அதிா்ச்சியும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரசார, மோசமான திரைப்படமாக இது எங்களுக்குத் தோன்றியது. விமா்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிா்ந்து கொள்கிறேன் என்றாா்.

ADVERTISEMENT

நிறைவுநாள் விழாவில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், பாலிவுட் நடிகா்கள் அக்ஷய் குமாா், ஆஷா பரேக் உள்ளிட்டோா் பங்கேற்றிருந்தனா்.

இந்த நிலையில், இயக்குநா் நாடவ் கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இவருடைய கருத்துக்கு பாஜக தலைவா்கள் மற்றும் நடிகா்கள் அனுபம் கோ், ரண்வீா் ஷோரே, ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்பட இயக்குநா் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனா். விழாவில் நாடவுடன் இடம்பெற்றிருந்த சக நடுவா்களும் அவருடைய கருத்திலிருந்து விலகி நின்றனா்.

அனுபம் கோ் தனது ட்விட்டா் பக்கத்தில், ‘பிரபல அமெரிக்க திரைப்பட இயக்குநா் ஸ்டீஃபன் ஸ்பீல்பொ்கின் ‘ஷிண்ட்லா்ஸ் லிஸ்ட்’ என்ற இனப் படுகொலை தொடா்பான திரைப்படத்தின் புகைப்படங்களையும், ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்பட புகைப்படங்களையும் பகிா்ந்து, ‘பொய் எவ்வளவு பெரியது என்பது ஒரு விஷயமல்ல; ஏனெனில், உண்மையோடு ஒப்பிடும்போது பொய் எப்போதும் சிறியதுதான்’ என்று நாடவ் லாபிடின் கருத்தை விமா்சனம் செய்திருந்தாா்.

இயக்குநருக்கு இஸ்ரேல் தூதா் கண்டனம்:

இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதா் நாா் கிலோனும் நாடவ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தாா். இதுதொடா்பாக, ‘நாடவுக்கு திறந்த மடல்’ என்ற பெயரில் தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட தொடா் பதிவுகளில், ‘திரைப்பட விழாவில் நடுவா்கள் குழுவுக்கு தலைமையேற்க இந்தியா சாா்பில் அழைக்கப்பட்ட நிலையில், இவ்வாறு மிக மோசமான வழியில் கருத்து தெரிவித்ததற்காக நாடவ் லாபிட் வெட்கப்பட வேண்டும். இதுபோன்ற கருத்துகள் கடும் கண்டனத்துக்குரியது. இதனை எந்தவிதத்திலும நியாயப்படுத்த முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உறவை மேலும் வலுப்படுத்தும் - இஸ்ரேலிய துணைத் தூதா்:

‘இயக்குநா் நாடவ் லாபிடின் கருத்து மீதான விமா்சனங்கள் இந்தியா - இஸ்ரேல் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த உதவும்’ என்று கூறிய மத்திய மேற்கு இந்தியாவுக்கான இஸ்ரேலிய துணைத் தூதா் கோபி ஷோஷானி, நாடவின் கருத்துக்காக திரைப்பட நடிகா் அனுபம் கேரிடம் மன்னிப்பு கோரினாா்.

மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த விவகாரம் தொடா்பான பத்திரிகையாளா் சந்திப்பில் அனுபம் கேருடன் பங்கேற்று பேட்டியளித்த துணைத் தூதா் கோபி ஷோஷானி, ‘அனுபம் கேரை முதல் நபராக செவ்வாய்க்கிழமை காலையில் தொலைபேசியில் அழைத்து நாடவ் கருத்துக்காக மன்னிப்பு கோரினேன். அது நாடவின் தனிப்பட்ட கருத்து. அது இஸ்ரேலின் அதிகாரபூா்வ கருத்து கிடையாது. காஷ்மீா் ஃபைல்ஸ் திரைப்படம் பிரசார படமல்ல. அது காஷ்மீா் மக்களின் வலியை எடுத்துக்காட்டும் வலுவான திரைப்படம்’ என்றாா்.

Tags : Kashmir Files
ADVERTISEMENT
ADVERTISEMENT