இந்தியா

மார்ச் முதல் குஜராத்தில் இலவச மின்சாரம்: முதல்வர் பகவந்த் மான் தகவல்

30th Nov 2022 05:03 PM

ADVERTISEMENT

 

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் வருகிற மார்ச் மாதம் முதல் குஜராத்தில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் நாளை(வியாழக்கிழமை) நடைபெறும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதையொட்டி மூன்று கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. முதல்கட்டத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. 

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று ஆமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர், 'தில்லி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதாக ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. அப்போது இது எப்படி சாத்தியம் என எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். ஆனால், ஆம் ஆத்மி சொன்னதைச் செய்தது. அதுபோலவே பஞ்சாபிலும். இன்று குஜராத்திலும் அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் வருகிற மார்ச் மாதம் முதல் இலவச மின்சாரம் வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 'குஜராத்திற்கு முதல்முறையாக வந்தபோது குஜராத் மாடலில் இருந்து சிலவற்றைக் கற்றுக்கொள்ளலாம் என்று வந்தேன். ஆனால், உண்மையான குஜராத் மாடலை இப்போது பார்க்கிறேன். மக்களுக்கு 15,000 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்கள் 30,000 ரூபாயை சேமிக்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

குஜராத்தில் கண்டிப்பாக ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும். நாங்கள் பாஜகவின் பி டீம் என்று சிலரும் காங்கிரசின் பி டீம் என்று சிலரும் சொல்கின்றனர். ஆனால், நாங்கள் 130 கோடி மக்களின் ஏ டீம்' என்றார். 

இதையும் படிக்க | டிபிஐ வளாகத்துக்கு அன்பழகன் பெயர் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT