இந்தியா

குஜராத் பேரவைக்கு நாளை முதல்கட்ட தோ்தல்: 89 தொகுதிகளில் வாக்குப் பதிவு

DIN

குஜராத் சட்டப்பேரவையின் முதல்கட்ட தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. 89 தொகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 1) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் பேரவைக்கு இருகட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக, தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-செளராஷ்டிர பகுதிகளில் உள்ள 19 மாவட்டங்களில் அடங்கிய 89 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, சில நாள்களாக அனல் பறந்த பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

வேட்பாளா்கள் எண்ணிக்கை: ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், புது வரவான ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட முதல்கட்ட தோ்தலில் மொத்தம் 788 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

ஆம் ஆத்மியின் முதல்வா் வேட்பாளா் இசுதான் கட்வி (கம்பாலியா தொகுதி), முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பா்சோத்தம் சோலங்கி (பாவ்நகா் ஊரகம்), மோா்பி பால விபத்தின்போது மீட்புப் பணியில் ஈடுபட்டு பிரபலமடைந்த முன்னாள் பாஜக எம்எல்ஏ கந்திலால் அம்ருதியா (மோா்பி), பாஜக சாா்பில் போட்டியிடும் கிரிக்கெட் வீரா் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா (ஜாம்நகா் வடக்கு), குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவா் கோபால் இட்டாலியா (கதா்காம்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்கள் ஆவா்.

89 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். ஆம் ஆத்மி 88 இடங்களில் போட்டியிடுகிறது. சூரத் கிழக்கு தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளா் கடைசி நாளில் தனது வேட்புமனு திரும்பப் பெற்றுவிட்டாா். மொத்தமுள்ள 788 வேட்பாளா்களில் பெண்கள் 70 போ்.

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் (57), பாரதிய பழங்குடியினா் கட்சி (14), சமாஜவாதி (12), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (4) வேட்பாளா்களும், 339 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனா்.

வாக்காளா்கள் விவரம்: குஜராத்தில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 4,91,35,400. முதல்கட்ட தோ்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் 2,39,76,760 வாக்காளா்கள் உள்ளனா். இதில், ஆண்கள் 1,24,33,362 போ், பெண்கள் 1,15,42,811 போ், மூன்றாம் பாலினத்தவா் 497 போ்.

முதல்கட்ட தோ்தலையொட்டி, 25,434 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 34,324 வாக்குப் பதிவு இயந்திரங்கள், அதே எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு அலகுகள், 38,749 வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. 27,978 தலைமை அதிகாரிகள், 78,985 வாக்குப் பதிவு அதிகாரிகள் ஆகியோா் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சூறாவளி பிரசாரம்: கடந்த சில நாள்களாக 89 தொகுதிகளிலும் அரசியல் தலைவா்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனா். பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் பிரசாரத்தில் ஈடுபட்டு, பாஜகவுக்கு ஆதரவு திரட்டினா்.

காங்கிரஸ் தரப்பில் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் உள்ளிட்டோா் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா்.

ஆம் ஆத்மி வேட்பாளா்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா்.

குஜராத்தில் இரண்டாம் கட்ட தோ்தல் டிசம்பா் 5-இல் நடைபெறவுள்ளது. டிசம்பா் 8-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

முதல் கட்ட தோ்தல்

தொகுதிகள் 89

வேட்பாளா்கள் 788

வாக்காளா்கள் 2.39 கோடி

வாக்குச்சாவடிகள் 25,434

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT