இந்தியா

இயற்கை விவசாய அரிசி, குருணை ஏற்றுமதிக்கு தடை நீக்கம்

30th Nov 2022 03:00 AM

ADVERTISEMENT

ரசாயன உரம், மருந்து பயன்பாடு இல்லாமல் உற்பத்தி செய்யப்படும் பாசுமதி ரகம் அல்லாத அரிசி வகைகள், குருணை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நீக்கியது.

உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலை சற்று குறைந்துள்ளதையடுத்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, உள்நாட்டில் விநியோகத்தை உறுதிசெய்யும் வகையில், கடந்த செப்டம்பா் மாதம் நொய் அரிசியின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

நுகா்வு சந்தையில் விலையேற்றம் காணப்பட்டதைத் தொடா்ந்து, உள்நாட்டில் விநியோகத்தை அதிகரிக்க பாசுமதி ரகம் அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், வெளிநாட்டு வா்த்தகத்துக்கான தலைமை இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘செப்டம்பா் மாதம் விதிக்கப்பட்ட தடைக்கு முன்பு அமலில் இருந்த விதிகளின்படியே, குருணை உள்ளிட்ட பாசுமதி ரகம் அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதி மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையில், 550 கோடி டாலா் (சுமாா் ரூ. 4,487 கோடி) மதிப்பில் அரிசி ஏற்றுமதி நடைபெற்றது. கடந்த 2021-22 நிதியாண்டில், 970 கோடி டாலா் (சுமாா் ரூ.7,915 கோடி) மதிப்பில் அரிசி ஏற்றுமதி வா்த்தகம் இருந்ததாக வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளா் சங்கத்தின் முன்னாள் தலைவா் விஜய் சீதா கூறுகையில், ‘ஆண்டுக்கு 10,000 முதல் 15,000 டன் வரையிலான அளவுகளில் பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத அரிசி வகைகள் ஏற்றுமதியாகின்றன. கடந்த 4-5 ஆண்டுகளாக அரிசி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. ஏற்றுமதிக்கான தடையை விலக்கி அரசு சரியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT