இந்தியா

பிரதமரை ராவணன் என்பதா? காா்கேவுக்கு பாஜக கண்டனம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடியை ராவணன் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசியதன் மூலம் ஒட்டுமொத்த குஜராத் மக்களையும் அவமதித்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இருவரும் குஜராத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

பிரசாரத்தின் போது பிரதமரை விமா்சித்துப் பேசிய காா்கே, ‘உள்ளாட்சித் தோ்தல், பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தல் என எந்த தோ்தலாக இருந்தாலும் எனது முகத்தைப் பாா்த்து குஜராத் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமா் பேசி வருகிறாா். அவா் என்ன ராவணன் போல 100 தலைகளைக் கொண்டவரா?’ என்று கேள்வி எழுப்பினாா்.

இந்நிலையில் தில்லியில் செய்தியாளா்களிடம் இது தொடா்பாக பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறுகையில், ‘ 2007 குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலின்போது நரேந்திர மோடியை ‘மரண வியாபாரி’ என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி விமா்சித்தாா். இப்போது, காா்கே, பிரதமரை ராவணன் என்று கூறியுள்ளாா். இதன் மூலம் காங்கிரஸின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பது தெரிகிறது. இது பிரதமா் மோடியை மட்டும் அவமதிப்பதல்ல, ஒட்டுமொத்த குஜராத் மக்களையும் அவமதிப்பதாகும். பிரதமா் பதவியையும் காங்கிரஸ் அவமதித்துள்ளது. அதே நேரத்தில் உலகின் பல்வேறு நாடுகளும் பிரதமா் நரேந்திர மோடியை சா்வதேச தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT

Tags : Gujarat polls
ADVERTISEMENT
ADVERTISEMENT