இந்தியா

அதிமுக பொதுக் குழு: மேல்முறையீட்டு மனு டிச. 6-இல் விசாரணை

30th Nov 2022 02:06 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

அதிமுக பொதுக் குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து விசாரிக்குமாறு எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டது. அப்போது, டிசம்பர் 6-ஆம் தேதி இந்த விவகாரம் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
 சென்னை வானகரத்தில் ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், ஜூலை 11 அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
 இதை எதிர்த்து எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்ததுடன், கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது.
 இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த பதில் மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து, நவம்பர் 30-ஆம் தேதி இந்த விவகாரம் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருந்தது.
 இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற வழக்கு நிலவரப் பட்டியலில் நவம்பர் 30-ஆம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 6-ஆம் தேதிக்கு தோராயமாக பட்டியலிடப்பட்டிருந்தது.
 இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு முன் செவ்வாய்க்கிழமை எதிர்மனுதாரர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரம் ஆஜராகி இது குறித்து நீதிபதிகள் அமர்விடம் குறிப்பிட்டார். மேலும், வழக்கு விசாரணையை தாமதிக்காத வகையில் டிசம்பர் 6-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
 மற்றொரு எதிர்மனுதாரரான அதிமுக தலைமை நிலையச் செயலர் தரப்பில் வழக்குரைஞர் வினோத் கண்ணாவும் ஆஜராகியிருந்தார்.
 அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் குரு கிருஷ்ணகுமார் வழக்கு விசாரணையை டிசம்பர் 13-ஆம் தேதிக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிபதிகளிடம் கேட்டார். அதற்கு நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டியது என்பதால் டிசம்பர் 6-ஆம் தேதியே விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT