இந்தியா

ஷ்ரத்தாவை கொன்ற ஒரு மணி நேரத்தில் உணவு ஆர்டர் செய்த அஃப்தாப்; அதிரும் காவலர்கள்

DIN

புது தில்லி: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தாவைக் கொலை செய்த ஒரு மணி நேரத்துக்குள், அஃப்தாப் செயலி மூலம் உணவு ஆர்டர் செய்திருக்கும் தகவலை சிறப்பு விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.

அதாவது, ஷ்ரத்தாவை மே 18ஆம் தேதி இரவு 9 மணிக்கு கொலை செய்ததாக அஃப்தாப் கூறியிருக்கும் நிலையில், அவரது செல்லிடப்பேசி பதிவுகள், அன்று இரவு 10 மணிக்கு அவர் செயலி மூலம் உணவு ஆர்டர் செய்திருப்பதாகக் கூறுகிறது. இதனால், காவல்துறையினருக்கு இருவேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஒன்று, கொலையாளி, கொலை நடந்த தேதியை சரியாக நினைவில்லாமல் கூறலாம் அல்லது திட்டமிட்டுக் கொலை செய்ததால், இவ்வளவு அமைதியாக, கொலைக்குப் பிறகும் இயல்பாக இருந்திருக்கலாம் என்பதுவே அது.

விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், ஒருவர் மிகக் கொடூரமான கொலையை செய்த பிறகு, அந்த அழுத்தமே இல்லாமல், உணவைப் பற்றி சிந்தித்திருக்க முடியுமா? என்பது குறித்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். வழக்கமாக இதுபோன்ற சூழ்நிலைகளில் குற்றவாளிகள் தாகத்தைக் கூட உணர முடியாத நிலையில்தான் இருப்பார்கள் என்கிறார்கள் காவலர்கள்.

தீவிரமான வாக்குவாதத்தின்போது சண்டை முற்றி இந்த கொலை நடந்ததாகவே அஃப்தாப் கூறுகிறார்கள். ஆனால் போலீஸ் சந்தேகிப்பது என்னவென்றால், அஃப்தாப் கூறுவது உண்மையென்றால், கொலை செய்த தேதியை குற்றவாளி தவறாகக் கூறலாம் அல்லது திட்டமிட்டுக் கொலை செய்திருக்கலாம் என்பதுவே.

மே 18ஆம் தேதி கொலை செய்ததாக அஃப்தாப் கூறினாலும், இதுவரை அதனை உறுதி செய்ய போதிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒன்றே ஒன்றைத் தவிர.. அதாவது, அஃப்தாப் செல்லிடப்பேசியிலிருந்து பல்வேறு செயலிகள் மூலம் நாள்தோறு உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதில் கொலைக்குப் பிறகு ஆர்டர் செய்யும் உணவின் அளவு குறைந்துள்ளது. அஃப்தாப் மற்றும் ஷ்ரத்தா இருவரும் சத்தர்பூர் பஹடி பகுதிக்கு குடியேறிய பிறகு தினமும் இரண்டு பேருக்கான உணவு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. கொலைக்குப் பிறகு ஒருவருக்கான உணவுதான் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்பது செல்லிடப்பேசியில் பதிவான தகவல்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதுதான் கொலை நடந்ததற்கான மிக முக்கிய ஆதாரமாக இதுவரை காவல்துறைக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களிலேயே ஒன்றாக உள்ளதாம்.

பல்வேறு தரப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அஃப்தாப்பிடமிருந்து பிரிந்து செல்ல ஷ்ரத்தா மே 3  - 4ஆம் தேதிகளில் தீவிரமாக இருந்துள்ளார் என்றும், ஆனால் அதற்கு அஃப்தாப் ஒப்புக்கொள்ளவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

அதற்கு முன்பும் கூட, ஷ்ரத்தா பல முறை அஃப்தாபிடமிருந்து விலகிச் செல்ல முயன்றதாகவும், ஆனால் எப்போதுமே அதற்கு அஃப்தாப் தடையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அஃப்தாபிடம் கேட்ட போது, ஷ்ரத்தா வேறொருவருடன் செல்வதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளதாக விசாரணையில் கூறப்படுகிறது.

தில்லிக்கு வந்த பிறகு, அஃப்தாப் தனது செல்லிடப்பேசி செயல்பாடுகளை வெகுவாகக் குறைத்துக் கொண்டிருப்பதும், கூகுளில் தேடியவற்றை உடனுக்குடன் அழித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பல்வேறு கட்ட பரிசோதனை மற்றும் ஆய்வக முடிவுகளுக்காக காவல்துறையினர் காத்திருக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT