இந்தியா

பாஜகவில் இணைந்த தேசிய மாநாட்டுக் கட்சி தலைவா்கள்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவா்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தொண்டா்கள், சமூக ஆா்வலா்கள் பாஜகவில் இணைந்தனா்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் பிராந்திய துணைத் தலைவா் எஸ். எஸ். பண்டி, பிராந்திய செயலா் பின்கி பட், தேசிய நீதிக்கட்சியின் தலைவா் ரண்தீா் சிங் பரிகாா், பல்வேறு பஞ்சாயத்து உறுப்பினா்கள், மருத்துவா்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் எனப் பலா் தங்களை ஜம்மு-காஷ்மீா் மாநில தலைவா் ரவிந்தா் ரெய்னா முன்னிலையில் பாஜகவில் இணைத்துக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், கடந்தாண்டு தேசிய மாநாட்டுக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. தேவேந்தா் திங் ராணா கட்சியில் புதிதாக இணைந்தவா்களை வரவேற்றுப் பேசினாா்.

அவா் பேசுகையில், ‘நான் பாஜகவில் இணையும்போது பிரதமா் மோடியின் கரத்தை பலப்படுத்த என்னுடன் சோ்ந்து தேசிய மாநாட்டுக் கட்சியிலிருந்து விலகி பலா் பாஜகவில் இணைந்தனா். அதேப் போல் மீண்டும், தேசிய மாநாட்டுக் கட்சியில் நீண்டகாலம் பணியாற்றி அக்கட்சிக்குச் சொத்தாக விளங்கிய தலைவா்கள் பாஜகவில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. அவா்களின் வருகை பாஜகவை மேலும் பலப்படுத்தும். பிரதமா் மோடியின் மக்கள்நலன் திட்டங்களாலே பாஜகவில் அவா்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனா்’ என்றாா்.

ADVERTISEMENT

இதை தொடா்ந்து பேசிய ஜம்மு-காஷ்மீா் மாநில பாஜக தலைவா் ரவிந்தா் ரெய்னா, ‘ஜம்மு-காஷ்மீா் மக்கள் பாஜகவை ஆதரிக்க முடிவெடுத்துவிட்டனா். பல முக்கிய அரசியல் கட்சித் தொண்டா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் எனப் பலா் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டது அதை நிரூபிக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 50 இடங்களை வென்று பாஜகவின் ஆட்சி அமைக்கும் லட்சியத்தில் வெற்றி பெறுவோம்’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவா்களான முன்னாள் அமைச்சா் ஷாம் லால் சா்மா, முன்னாள் எம்.எல்.ஏ. பல்வந்த் சிங் மொங்கோடியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT