இந்தியா

தில்லி பாண்டவ் நகர் கொலை: 6 உடல்பாகங்கள் மீட்பு; ஆயுதங்களைத் தேடும் காவல்துறை!

29th Nov 2022 01:56 PM

ADVERTISEMENT

 

ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கு நம் நினைவை விட்டு அகலும் முன்பே, தில்லியின் பாண்டவ் நகரில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகர் பகுதியில் கல்யாண்புரியைச் சேர்ந்த அஞ்சன் தாஸை, அவரது மனைவி பூனம், வளர்ப்பு மகன் தீபக் ஆகியோர் சேர்ந்து கொன்று, உடலை துண்டு துண்டுக்கப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அஞ்சன் தாஸ்(45) என்பவர் மே 30-இல் கொல்லப்பட்டாா். அவரது மனைவி பூனம் (48) மற்றும் வளா்ப்பு மகன் தீபக் (25) ஆகியோரால் அவா் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக பூனம், தீபக் ஆகியோா் பாண்டவ் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ஜூன் 5 அன்று கிழக்கு தில்லியின் கல்யாண்புரியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் அஞ்சன் தாஸின் உடல் பாகங்கள் பைக்குள் அடைக்கப்பட்டு வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த சில நாள்களில், அவரது கால்கள், தொடைகள், மண்டை ஓடு மற்றும் முன்கை ஆகியவை மீட்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, பாண்டவ் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உயிரிழந்த தாஸுக்கு பிகாரில் மனைவி மற்றும் எட்டு மகன்கள் உள்ளனா். ஆனால், அவா் இந்த உண்மையை பூனத்திடம் மறைத்துள்ளாா். உடல் உறுப்புகளுடன் பொருத்தம் பாா்க்க தாஸின் உறவினா்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க ஒரு குழு அங்கு அனுப்பப்படவுள்ளது.

தாஸ் தனது வளா்ப்பு மகள் மற்றும் வளா்ப்பு மகனின் மனைவியுடன் தொடர்பில் இருப்பதை நினைத்து சந்தேகத்தின் பேரில் தாய்-மகன் இருவரும் அவரைக் கொன்றுள்ளனா். மூன்று முதல் நான்கு நாள்களாக கிழக்கு தில்லியில் பல்வேறு இடங்களில் உடல் உறுப்புகளை வீசியுள்ளனா். மண்டை ஓட்டை புதைத்துள்ளனர்.

படிக்க: பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக ஆசிம் முனீர் பொறுப்பேற்பு!

தாஸுக்கு பானத்தில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்ததாகவும், அவா் மயங்கி விழுந்த பிறகு, கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி 
அவரை கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவா்கள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். 

ஜூன் மாதம் உடல் உறுப்புகள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, வீடு வீடாகச் சென்று சரிபாா்த்தனா். பின்னா், பூனம் மற்றும் தீபக் ஆகியோரை போலீஸாா் அழைத்துச் சென்று, அந்த உடல் தாஸின் உடல் என அடையாளம் காணப்பட்டது.

தாஸ் காணாமல் போனது குறித்து புகாா் எதுவும் அளிக்கப்படவில்லை. மேலும், பூனம், அவரது மகன் அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடு இருந்தது. இதனால், இருவா் மீதும் போலீஸாா் சந்தேகமடைந்தனா். தீவிர விசாரணையைத் தொடா்ந்து, அவா்கள் தாஸை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனா்.

2017-இல் தாஸை பூனம் திருமணம் செய்து கொண்டாா். தாஸை திருமணம் செய்து கொண்டபோது, ​ அவருக்கு பிகாரில் குடும்பம் இருப்பது பூனத்துக்கு தெரியாது.

படிக்க: இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப் படை!

லிஃப்ட் ஆபரேட்டராக பணிபுரிந்த தாஸ், பூனத்தின் நகைகளை விற்று பணத்தை பிகாரில் உள்ள தனது குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளாா். இதையறிந்த பூனமும், அவரது மகனும் மாா்ச் - ஏப்ரல் மாதங்களில் கொலைக்குத் திட்டமிடத் தொடங்கியது விசாரணையில் தெரிய வந்தது. தாஸின் உடல் பாகங்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்பட்ட குளிா்சாதனப்பெட்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொலைக்கான ஆயுதங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. தற்போது போலீஸ் காவலில் உள்ள இருவரிடமும்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT