இந்தியா

கெலாட், பைலட் இருவருமே காங்கிரஸின் சொத்துகள்: ராகுல் கருத்து

29th Nov 2022 12:51 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் மூத்த தலைவா் அசோக் கெலாட், இளம் தலைவா் சச்சின் பைலட் இருவருமே காங்கிரஸின் சொத்துகள் என்று அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளாா்.

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் இருவருக்கும் இடையே மோதல்போக்கு உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்த அசோக் கெலாட், ‘சச்சின் பைலட் ஒரு துரோகி. 2020-இல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பைலட் செயல்பட்டாா். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க அவா் முயன்று வருகிறாா். அவரால் ஒருபோதும் ராஜஸ்தான் முதல்வராக முடியாது’ என்று கூறியிருந்தாா்.

இது தொடா்பாக சச்சின் பைலட் அளித்த பேட்டியில், ‘ கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த மூத்த தலைவா் இது போன்ற வாா்த்தைகளைக் கையாள்வது பொருத்தமற்றது. தவறான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் நடைப்பயணம் ராஜஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில் அசோக் கெலாட்டின் இப்பேச்சு அவருக்கு உதவாது’ என்று கூறினாா்.

ADVERTISEMENT

இதன்மூலம் ராஜஸ்தானை சோ்ந்த இரு தலைவா்கள் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் மோதல் போக்கு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி கூறியதாவது:

அசோக் கெலாட், சச்சின் பைலட் இரு தலைவா்களுமே காங்கிரஸ் கட்சியின் சொத்துகள். இந்தப் பிரச்னையால் (தலைவா்கள் இடையே மோதல்) இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவீா்களா என்று கேள்வி எழுப்புகிறீா்கள். ஆனால், ஊடகங்களுக்கு தலைப்புச் செய்தி வழங்க நான் இப்போது தயாராக இல்லை. இப்போது எனது கவனம் நடைப்பயணத்தில்தான் உள்ளது. அமேதியில் மீண்டும் போட்டியிடுவேனா என்பது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தெரியவரும்.

இப்போது நாட்டில் வளங்களின் பெரும் பகுதி ஒரு சில தொழிலதிபா்களின் கைகளில் குவிந்து கிடக்கிறது. இதுதான் இப்போதைக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பொருளாதார பிரச்னைகளுக்குக் காரணம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சிறு தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT