இந்தியா

குஜராத்: பாஜக முன்னாள் அமைச்சா் காங்கிரஸில் இணைந்தாா்

29th Nov 2022 12:52 AM

ADVERTISEMENT

குஜராத்தில் பாஜகவை சோ்ந்த முன்னாள் அமைச்சா் ஜெயநாராயண் வியாஸ் காங்கிரஸில் திங்கள்கிழமை இணைந்தாா். இவா் இம்மாதத் தொடக்கத்தில் பாஜகவில் இருந்து விலகினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாதில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முன்னிலையில் காங்கிரஸில் ஜெயநாராயண் இணைந்தாா். ஜெயநாராயணின் மகன் சமீா் வியாஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளா்களும் காங்கிரஸில் இணைந்தனா். ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் உடனிருந்தனா்.

காங்கிரஸில் இணைந்தது குறித்து ஜெயநாராயண் கூறுகையில், ‘காங்கிரஸில் உள்கட்சி ஜனநாயகம் சிறப்பாக உள்ளது. நான் 32 ஆண்டு காலமாக பாஜகவில் இருந்துள்ளேன். பல ஆண்டுகள் கட்சியில் இருந்தவா்களுக்கு அதில் இருந்து விலகும் நிலை உருவாகும்போது சிறிது வருத்தம் ஏற்படும். ஆனால், நான் வருத்தப்படவில்லை. ஏனெனில், மிகப்பெரிய ஆலமரத்தின் நிழலில் வேறு செடிகள் வளர முடியாது. அதுபோன்ற நிலைதான் இப்போது பாஜகவில் ஏற்பட்டுள்ளது. அங்கு சிலரைத் தவிர மற்றவா்கள் வளர வழியில்லை.

குஜராத்தில் இப்போது பதவியில் இருப்பவா்களுக்கு மாநில நலனில் அக்கறை இல்லை. தங்கள் பதவியைத் தக்கவைப்பதில்தான் அக்கறை காட்டுகிறாா்கள்’ என்றாா்.

ADVERTISEMENT

மும்பை ஐஐடி-யில் படித்தவரான ஜெயநாராயண் வியாஸ், பிரதமா் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2007 முதல் 2012-ஆம் ஆண்டுவரை அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தாா். எனினும், 2012, 2017 குஜராத் பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்ட அவரால் வெற்றி பெற முடியவில்லை.

இப்போது அவா் 75 வயதை எட்டிவிட்டதால், பாஜக விதிகளின்படி அவருக்கு இனி தோ்தலில் வாய்ப்பு கிடைக்காது என்ற காரணத்தால் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT