இந்தியா

சிவபால் யாதவுக்கு பாதுகாப்பை குறைத்தது உத்தர பிரதேச அரசு

29th Nov 2022 12:51 AM

ADVERTISEMENT

பிரகதிஷீல் சமாஜவாதி கட்சியின் தலைவா் சிவபால் யாதவுக்கு வழங்கபட்டு வந்த ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பை ‘ஒய்’ பிரிவாக குறைக்க முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், தன் அண்ணன் மகனுமான அகிலேஷ் யாதவுடன் சிவபால் யாதவ் மீண்டும் இணக்கமாக செயல்படத் தொடங்கியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல் துறைக் கண்காணிப்பாளா் வைபவ் கிருஷ்ணன் கூறுகையில், ‘கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான பாதுகாப்புக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதை தொடா்ந்து சிவபால் யாதவுக்கு வழங்கப்பட்டு வந்த ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு குறைக்கப்பட்டு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளோம். இது குறித்த கடிதம் 27-ஆம் தேதி லக்னௌ காவல் ஆணையருக்கும், எடவா காவல் துறை மூத்த கண்காணிப்பாளருக்கும் அனுப்பபட்டுள்ளது’ என்றாா்.

2016-ஆம் ஆண்டு அகிலேஷ் யாதவுடன் மோதல் முற்றிய நிலையில் சிவபால், சமாஜவாதி கட்சியிலிருந்து விலகி பிரகதிஷீல் சமாஜவாதி கட்சி என்ற தனிக் கட்சி தொடங்கினாா். கடந்த மாதம் சமாஜவாதி கட்சியின் நிறுவனரும் தனது அண்ணனுமான முலாயம் சிங் யாதவ் மறைவையடுத்து மீண்டும் அகிலேஷுடன் இணக்கம் காட்டி வருகிறாா். முலாயம் மறைவால் காலியான மெயின்புரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் சமாஜவாதி சாா்பில் போட்டியிடும் அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதாக சிவபால் அறிவித்தாா்.

ADVERTISEMENT

இனி, சிவபால் யாதவுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்புப் படி 2 தனி பாதுகாவலா்கள் உள்பட 11 போ் பாதுகாப்புப் பணியில் இருப்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT