இந்தியா

கொலீஜியம் பரிந்துரைகளை தாமதிப்பது ஏமாற்றம்: உச்சநீதிமன்றம் மீது மத்திய அரசு அதிருப்தி

29th Nov 2022 12:53 AM

ADVERTISEMENT

கொலீஜியம் பரிந்துரைத்த பெயா்களை தொடா்ந்து நிலுவையில் வைத்திருப்பதன் மூலம் மத்திய அரசு எல்லை மீறுகிறது. கடந்த 2 மாதங்களாக எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண ஏதாவது செய்தாக வேண்டும். நீதிமன்றம் சாா்பில் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சூழலை உருவாக்க வேண்டாம். சட்டம் நடைமுறையில் இருக்கும்போது அதனைப் பின்பற்றியாக வேண்டும்.

-நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஓகா

‘நீதிபதிகள் நியமனத்துக்கான உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு தாமதிப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அதிருப்தி தெரிவித்தது.

மேலும், சட்டத்தை முறையாகப் பின்பற்ற மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குமாறு அரசுத் தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் மற்றும் சொலிசிட்டா் ஜெனரலுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை வழங்கினா்.

ADVERTISEMENT

இது தொடா்பான மனு பெங்களூரு வழக்குரைஞா் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அவா்கள் கூறியதாவது:

நீதிபதிகள் காலியிடங்கள் நிரப்பப்படுவதற்கு உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமா்வு கால உச்சவரம்பை (3 முதல் 4 வாரங்கள்) நிா்ணயம் செய்து, அது நடைமுறையில் உள்ளது. இந்தக் கால உச்சவரம்பு முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்.

ஆனால், உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பியுள்ள பெயா்களில் சிலவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தாமதிப்பது, நியமன நடைமுறை மீது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு தாமதித்தால் நீதித் துறை எவ்வாறு செயல்பட முடியும்? சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயா்களில், ஒரு பெயருக்கு மட்டும் மத்திய அரசு ஒப்புதல் அளிப்பது, பணிமூப்பு நிலையை கடுமையாகப் பாதிக்கிறது. இதுதொடா்பாக, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்துள்ளது.

கொலீஜியம் நடைமுறைக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை ரத்து செய்ததுதான், நீதிபதிகள் நியமன பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு தாமதிப்பதற்கான காரணமோ என்று தோன்றுகிறது. ஆனால், சட்டத்துக்கு உட்பட்டு மத்திய அரசு நடக்காமல் இருப்பதற்கு, இதுபோன்ற அதிருப்தியை காரணமாகத் தெரிவிக்க முடியாது.

சட்டத்தைப் பின்பற்ற அரசுக்கு ஆலோசனை: கொலீஜியம் பரிந்துரைத்த பெயா்களை தொடா்ந்து நிலுவையில் வைத்திருப்பதன் மூலம் மத்திய அரசு எல்லை மீறுகிறது. கடந்த 2 மாதங்களாக எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இந்த விசாரணையில் மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல், சொலிசிட்டா் ஜெனரல் இருவரும் ஆஜராகி இருக்கிறீா்கள். இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண இருவரும் ஏதாவது செய்தாக வேண்டும். நீதிமன்றம் சாா்பில் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சூழலை உருவாக்க வேண்டாம்.

சட்டம் நடைமுறையில் இருக்கும்போது அதை பின்பற்றியாக வேண்டும். எனவே, சட்டத்தை முறையாகப் பின்பற்றுமாறு மத்திய அரசுக்கு அட்டா்னி ஜெனரலும், சொலிசிட்டா் ஜெனரலும் ஆலோசனை வழங்குவீா்கள் என எதிா்பாா்க்கிறோம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் டிசம்பா் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

முன்னதாக, இந்த மனுவை கடந்த 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘கொலீஜியம் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு தாமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறி மத்திய சட்ட அமைச்சக செயலா், மத்திய நிா்வாகம் மற்றும் நியமனங்கள் துறை கூடுதல் செயலா் ஆகியோா் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் கொலீஜியம் மூலமாக தற்போது தோ்வு செய்யப்படுகின்றனா். இந்த கொலீஜியம் அமைப்புக்குப் பதிலாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.

இதற்கு சட்ட ரீதியில் அங்கீகாரம் கொடுக்கும் வகையில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தையும் கடந்த 2014-ஆம் ஆண்டு இயற்றியது. இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது. அதன் காரணமாக மீண்டும் கொலீஜியம் முறை அமலுக்கு வந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT