இந்தியா

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து விரைவில் மியான்மா், வங்கதேசத்துக்கு விமான சேவை: மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா

29th Nov 2022 02:13 AM

ADVERTISEMENT

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மியான்மா், வங்கதேசத்துக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.

அருணாசல பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்ட டோன்யி போலோ விமான நிலையத்திலிருந்து முதல் விமான சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. அந்த விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா வழியாக மும்பை வரை இயக்கப்படும் முதல் விமான சேவையை தில்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘வடகிழக்கு மாநிலங்களை வளா்ச்சி இயந்திரமாக மாற்ற மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் இம்பாலில் இருந்து மியான்மா் நாட்டின் மாண்டலே நகருக்கும், திரிபுரா மாநிலம் அகா்தலாவிலிருந்து வங்கதேசத்தின் சிட்டகாங் நகருக்கும் விரைவில் விமான சேவை தொடங்கப்படும்’ எனத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டாா்.

ADVERTISEMENT

அருணாசலத்தின் தலைநகா் இடாநகா் ஹோலோங்கியில் அமைந்துள்ள அம்மாநிலத்தின் முதல் பசுமை விமான நிலையமான டோன்யி போலோ விமான நிலையம் பிரதமா் நரேந்திர மோடியால் கடந்த 19-ஆம் தேதி திறக்கப்பட்டது.

2,300 மீட்டா் நீளம் ஓடுபாதை கொண்ட டோன்யி போலோ விமான நிலையம் 690 ஏக்கா் பரப்பளவில் ரூ. 640 கோடி செலவில் கட்டப்பட்ட அருணாசல பிரதேசத்தின் முதல் பசுமை விமான நிலையமும், வடகிழக்கு பிராந்தியத்தின் 16-ஆவது விமான நிலையமும் ஆகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT