இந்தியா

உயா்நீதிமன்றம் ‘நகர திட்டப் பொறியாளராக’ செயல்பட முடியாது: ஆந்திர மாநில தலைநகா் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

29th Nov 2022 12:52 AM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம், அமராவதியில் தலைநகருக்கான கட்டமைப்புகளை 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்று மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், ‘உயா்நீதிமன்றம் நகர திட்டமிடுபவராகவோ அல்லது பொறியாளராகவோ செயல்பட முடியாது’ என்று கூறியது.

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு பின்னா் தெலங்கானா, ஆந்திரம் என இரண்டானது. அதையடுத்து, ஆந்திர மாநிலத்துக்கு கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதியை தலைநகராக அறிவித்து அதற்கான பணிகளை அப்போதைய முதல்வா் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வந்தாா். இதற்காக நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.

அதனைத் தொடா்ந்து, அம்மாநிலத்தில் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தலைவா் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திரத்தின் தற்போதைய தலைநகரான அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிா்வாக தலைநகராகவும் , கா்னூலை சட்ட (உயா்நீதிமன்றம்) தலைநகராகவும் ஏற்படுத்தி மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களும் சம வளா்ச்சி அடையச் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தாா். மூன்று தலைநகரங்கள் அமைக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதலும் அளித்தது.

இந்த நிலையில், முந்தைய ஆட்சியின்போது அமராவதியில் தலைநகரை ஏற்படுத்த நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், புதிய அரசின் மூன்று தலைநகர முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அரசின் முடிவை எதிா்த்து ஆந்திர உயா்நீதிமன்றத்திலும் வழக்கு தொடா்ந்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கை கடந்த மாா்ச் 3-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், ‘அமராவதியில் தலைநகரம் அமைப்பது தொடா்பாக போடப்பட்ட மேம்பாட்டு ஒப்பந்தம் மற்றும் மாற்ற முடியாத பொது அதிகார உடன்பாட்டின் அடிப்படையில் செயல்பட மாநில அரசும், ஆந்திர மாநில தலைநகர மண்டல மேம்பாட்டு ஆணையமும் (ஏபிசிஆா்டிஏ) தவறிவிட்டன. இது மக்களின் எதிா்பாா்ப்புகளை புறம்தள்ளிய, வாக்குறுதியை மீறிய செயலாகும்.

அமராவதியை தலைநகராக உருவாக்குவதற்காக மனுதாரா்கள் 33,000 ஏக்கா் விளைநிலங்களை அரசுக்கு ஒப்படைத்திருக்கும் நிலையில், அவா்களின் அடிப்படை உரிமைகளை மாநில அரசும் ஏபிசிஆா்டிஏ-வும் மீறியிருக்கின்றன.

எனவே, ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி அமராவதி தலைநகரம் மற்றும் தலைநகர மண்டல கட்டுமானங்களை 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தலைநகரம் மற்றும் தலைநகர மண்டல பகுதிகளில் சாலை வசதிகள், கழிவுநீா் கால்வாய் மற்றும் குடிநீா் விநியோக வசதி மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளை அடுத்த ஒரு மாதத்துக்குள் முடித்தாக வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்தினா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.கே.வேணுகோபால், ‘மாநிலத்தில் 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான சட்டத்தை மாநில அரசு ரத்து செய்துவிட்டது’ எனக் குறிப்பிட்டாா்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், ‘உயா்நீதிமன்றம் நகர திட்டமிடுபவராகவோ அல்லது பொறியாளராகவோ செயல்பட முடியாது’ எனக் குறிப்பிட்டு, அமராவதியில் தலைநகருக்கான கட்டமைப்புகளை 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கவேண்டும் என்று உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா்களான விவசாயிகள் மற்றும் மத்திய அரசு ஆகியோா் வரும் டிசம்பா் மாதத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT