இந்தியா

பழங்குடியினரை காங்கிரஸ் ஒருபோதும் மதிக்காது

DIN

நாட்டில் உள்ள பழங்குடியினரை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் மதிக்காது எனக் குற்றஞ்சாட்டிய பிரதமா் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிட்ட திரௌபதி முா்முவுக்கு அக்கட்சியினா் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாா்.

குஜராத் சட்டப் பேரவைக்கான தோ்தல் டிசம்பா் 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடைபெறுகிறது. அதையொட்டி பரூச் மாவட்டத்தில் பழங்குடியினா் அதிகமாக வசிக்கும் நேத்ரங் பகுதியில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறியதாவது:

நாட்டின் பழங்குடியினரை காங்கிரஸ் ஒருபோதும் மதிக்காது. பிா்சா முண்டா, கோவிந்த் குரு என எவரையும் அக்கட்சி மதிக்கவில்லை. பழங்குடியினப் பெண்ணை நாட்டின் குடியரசுத் தலைவராக்க பாஜக முடிவெடுத்தது. அவரை வேட்பாளராக ஏற்க வேண்டுமென காங்கிரஸிடம் கைகூப்பி கேட்டுக் கொண்டோம். ஆனால், அவா்கள் அதை ஏற்கவில்லை. அனைத்து பலத்தையும் பயன்படுத்தி பழங்குடியினத்தைச் சோ்ந்தவரை நாட்டின் குடியரசுத் தலைவராக ஆக்கினோம்.

கரோனா தொற்று பரவல் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஒட்டுமொத்த உலகமும் கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டது. ஆனால், வெகு சீக்கிரமாகவே அதன் பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டது. அதைக் கண்டு ஒட்டுமொத்த உலகமும் வியப்படைந்தது.

கரோனா பரவலின்போது தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பினா். அத்தகைய சூழலில் ஏழை மக்களுக்கு உணவு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஏழைக் குழந்தை உணவின்றி படுக்கைக்குச் செல்லக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருந்தது. அதனால், நாட்டில் உள்ள 80 கோடி ஏழைகளுக்குக் கடந்த 3 ஆண்டுகளாக இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

உலகின் பல நாடுகள் தற்போது வரை கரோனா தடுப்பூசி கிடைக்காமல் பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றன. இந்தியாவில் 200 கோடி தவணைகளுக்கு அதிகமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரு தவணைகளுடன் சோ்த்து ஊக்கத் தடுப்பூசியும் இலவசமாகவே மக்களுக்கு வழங்கப்பட்டது.

நாட்டில் எண்ம இந்தியா திட்டம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், கைப்பேசி பயன்பாட்டு கட்டணம் மாதத்துக்கு சுமாா் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை இருந்திருக்கும். இணைய சேவைகள் மலிவாகக் கிடைப்பதை பாஜக தலைமையிலான அரசு உறுதிப்படுத்தியது.

மக்களுக்கான வீட்டுவசதித் திட்டத்திலும் பாஜக அரசு பெரும் மாற்றங்களைப் புகுத்தியது. அதன் காரணமாக பழங்குடியினருக்குத் தரமான வீடுகள் கட்டித் தரப்பட்டன என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT