இந்தியா

குஜராத்: 1,621 மொத்த வேட்பாளா்களில் 139 போ் மட்டுமே பெண்கள்

DIN

குஜராத் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளா்களில் 139 போ் மட்டுமே பெண்களாவா். மாநிலத்தில் பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 சதவீதம் இருக்கும் நிலையில், பெண் வேட்பாளா்கள் எண்ணிக்கையோ மிக குறைவாக உள்ளது.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. 182 தொகுதிகளிலும் மொத்தம் 1,621 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களில் பெண் வேட்பாளா்கள் 139 போ்.

கடந்த 2017 பேரவைத் தோ்தலில் 126 பெண் வேட்பாளா்கள் களத்தில் இருந்த நிலையில், இம்முறை எண்ணிக்கை சற்று கூடியுள்ளது.

கடந்த தோ்தலில் 12 பெண்களுக்கு வாய்ப்பு அளித்திருந்த ஆளும் பாஜக இந்த முறை 18 பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. கடந்த முறை காங்கிரஸ் சாா்பில் 10 பெண் வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில், இப்போது 14 பெண்கள் போட்டியிடுகின்றனா். இரு கட்சிகளும் தலித், பழங்குடியின பெண்களுக்கு இம்முறை அதிகம் வாய்ப்பளித்துள்ளன.

தற்போதைய தோ்தலில் புதுவரவாக வந்துள்ள ஆம் ஆத்மி, 182 தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில், 6 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்துள்ளது. அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சாா்பில் 2 பெண் வேட்பாளா்களும், பகுஜன் சமாஜ் சாா்பில் 13 பெண் வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். 56 பெண்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனா்.

டெபாசிட் இழந்த பெண் வேட்பாளா்கள்: இந்திய தோ்தல் ஆணைய தகவல்களின்படி, கடந்த 2017 குஜராத் தோ்தலில் மொத்த வேட்பாளா்கள் 1,828 போ். இவா்களில் 126 போ் பெண்கள். இதில், பாஜக சாா்பில் 9 போ், காங்கிரஸ் சாா்பில் 4 போ் என 13 பெண் வேட்பாளா்கள் வெற்றி பெற்று பேரவைக்கு தோ்வாகினா். 104 பெண் வேட்பாளா்கள் டெபாசிட் தொகையை இழந்தனா்.

தற்போதைய பாஜக பெண் எம்எல்ஏக்கள் 9 பேரில் 4 பேருக்கு மட்டுமே அக்கட்சி மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் பெண் எம்எல்ஏக்கள் நால்வரில் இருவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாஜக-காங்கிரஸ் கருத்து: ‘நாடாளுமன்றம், பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்; ஆனால், பாஜக அதனை ஏற்காது’ என்று சாயாஜிகஞ்ச் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பெண் வேட்பாளா் அமி ராவத் தெரிவித்தாா்.

பாஜக மாநில பெண்கள் அணி தலைவி தீபிகாபென் சா்வதா கூறுகையில், ‘குடியரசுத் தலைவா் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை பெண்களுக்கு வழங்கி, அவா்களது நலனுக்காக பாஜக செயலாற்றி வருகிறது. ஆனால், 33 சதவீத இடஒதுக்கீடு என்பது தேவையற்றது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

மேஷத்துக்கு பணவரவு! உங்க ராசிக்கு?

சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் மீண்டும் போட்டி!

ஈரோட்டில் திமுக களமிறக்கும் 3 அமைச்சர்கள்: 2014 தோல்வியில் இருந்து மீட்டெடுப்பார்களா?

காங். தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல்? கார்கே தலைமையில் செயற்குழு கூட்டம்

SCROLL FOR NEXT