இந்தியா

தொடரும் ராகிங் கொடுமை: 2-வது மாடியிலிருந்து குதித்த மாணவர்!

28th Nov 2022 11:36 AM

ADVERTISEMENT

அசாம் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் சீனியர்கள் ராகிங் செய்ததால் இரண்டாவது மாடியிலிருந்து மாணவர் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் திப்ருகர் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் 5 பேர் சனிக்கிழமை இரவு ராகிங் செய்துள்ளனர். ராகிங்கை பொருத்துக் கொள்ள முடியாத ஆனந்த் சர்மா என்ற ஜூனியர் மாணவர் விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்ததில் படுகாயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஆனந்த் சர்மாவை மீட்ட விடுதியின் பொறுப்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், ஆனந்த் சர்மாவின் பெற்றோர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து சீனியர் மாணவர்கள் மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளதாக திப்ருகர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | காலாவதியானது ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்

இந்த சம்பவம் குறித்து ஆனந்த் சர்மாவின் தாயார் அளித்த பேட்டியில்,  எனது மகன் நான்கு மாதங்களாக இரவில் தூங்க விடுவதில்லை என்று கூறினார். சீனியர்களுக்கு இரவில் உணவு கொண்டு வர வேண்டும், அவர்களின் அழுக்கு துணிகளை துவைக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார்கள். இதெல்லாம், எனது மகன் சொல்லும்போது, இது வாழ்க்கையில் ஒரு பாடம் எனக் கூறினோம். தனியார் விடுதியில் சேர்க்குமாறு கூறினார். ஆனால், தனியார் விடுதியில் சேர்க்கும் அளவிற்கு எங்களிடம் வசதி இல்லை. எனது மகனுக்கு இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை என்றார்.

இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், திப்ருகர் பல்கலைக்கழக ராகிங் சம்பவத்தை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. குற்றவாளிகளை பிடிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. பாதிக்கப்பட்ட மாணவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள், ராகிங் வேண்டாம் எனப் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT