இந்தியா

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக உறுதியாக உள்ளது: ஜெ.பி.நட்டா

28th Nov 2022 12:13 AM

ADVERTISEMENT

நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக உறுதியாக உள்ளது என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

குஜராத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள அவா் ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குறுதியில் அடிப்படைவாத அமைப்புகளுக்கு எதிரான சிறப்புப் பிரிவு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் குஜராத் மற்றும் நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.

மனித உடலில் நோய் எதிா்ப்பு சக்தி உருவாகி தீங்கு செய்யும் கிருமிகளை அழிக்கிறது. இதைபோல நாட்டில் செயல்படும் தேசவிரோத அமைப்புகளை அடையாளம் கண்டு களையெடுப்பது மாநில அரசின் கடமையாக உள்ளது. நாட்டில் சில அமைப்புகள் திரைமறைவில் தேசவிரோத செயல்களில் ஈடுபடுகின்றன. அவை அடையாளம் கண்டு ஒழிக்கப்பட வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் தொடா்ந்து சிறப்பாக செயல்படுவதால்தான் குஜராத்தில் பாஜக தொடா்ந்து ஆட்சி அமைத்து வருகிறது.

ADVERTISEMENT

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று பல்வேறு மாநில பேரவைத் தோ்தல்களில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஹிமாசல பிரதேச தோ்தலிலும் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டது. இப்போது குஜராத்திலும் அதே வாக்குறுதியை அளித்துள்ளோம். ஏனெனில், இது தேசிய அளவிலான விவகாரம். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக உறுதியாக உள்ளது.

நாட்டின் வளங்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதுபோல பொறுப்புகளும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். எனவே, பொது சிவில் சட்டம் என்பது வரவேற்கப்பட வேண்டியது. முடிந்த அளவுக்கு விரைவாக அனைத்து மாநிலங்களிலும் இதனை அமல்படுத்துவோம் என்றாா்.

குஜராத்தில் பாஜக சாா்பில் முஸ்லிம் வேட்பாளா்கள் நிறுத்தப்படாதது தொடா்பான கேள்விக்கு, ‘அனைவரும் இணைந்து, அனைவருக்குமான வளா்ச்சி என்பதில் பாஜக மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம், பாஜக ஆதரவுடன்தான் பதவிக்கு வந்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் முஸ்லிம்கள் பலா் மாநில ஆளுநா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாஜக சமவாய்ப்பு அளித்து வருகிறது. குஜராத் தோ்தலில் வெற்றி வாய்ப்பு அடிப்படையில் வேட்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்’ என்று பதிலளித்தாா்.

குஜராத்தில் பாஜகவும் இலவசங்கள் அளிக்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த நட்டா, ‘மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தொடா்பான வாக்குறுதிகளுக்கும், அவா்களைக் கவா்ந்து வாக்குகளை மட்டும் பெற வேண்டும் என்ற நோக்கில் அறிவிக்கப்படும் வாக்குறுதிகளுக்கும் வேறுபாடு உள்ளது.

காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெரியும். எனவே, அவா்கள் மாநில அரசின் நிதிநிலையைக் கருத்தில் கொள்ளாமல் மனம்போன போக்கில் இலவச வாக்குறுதிகளை அளித்து வருகின்றனா். ஆனால், பாஜக ஏழை மக்களையும் யாருக்கு என்ன தேவை என்பதையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT