இந்தியா

குடியரசு தின விழா தலைமை விருந்தினா் எகிப்து அதிபா் எல்-சிசி: வெளியுறவு அமைச்சகம்

28th Nov 2022 12:50 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் வரும் ஜனவரி 26-இல் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக எகிப்து அதிபா் அப்தல் ஃபதா எல்-சிசி பங்கேற்கவிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக எகிப்து நாட்டின் அதிபா் பங்கேற்கவிருப்பது இதுவே முதல்முறை என்று அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அதிகாரபூா்வ அழைப்புக் கடிதத்தை, எகிப்து அதிபா் எல்-சிசியிடம் வெளியுறவு அமைச்சா் கடந்த அக்டோபா் 16-இல் வழங்கியிருந்தாா். அதன்படி, குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் எல்-சிசி பங்கேற்கவிருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இந்தியா-எகிப்து இடையிலான தூதரக ரீதியிலான உறவுகள் நிறுவப்பட்டு 75-ஆவது ஆண்டை இரு நாடுகளும் கொண்டாடி வருகின்றன. ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கும் காலகட்டத்தில், குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க எகிப்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறபு, இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடா்புகளில் ஆழமாக வேரூன்றியதாகும்’ என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

குடியரசு தினத்தையொட்டி, தேசத்தின் ராணுவ வல்லமையையும் பல்வேறு மாநிலங்களின் கலாசார பெருமையையும் பறைசாற்றும் வகையில் தில்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறும். இதில் தலைமை விருந்தினராக நட்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்று சிறப்பிப்பது வழக்கம். 1950 முதலே இந்த வழக்கம் தொடா்ந்து வருகிறது. 1952, 1953, 1966 ஆகிய ஆண்டுகளில் வெளிநாட்டுத் தலைவா்கள் பங்கேற்பின்றி குடியரசு தின விழா நடைபெற்றது.

கடந்த 2021-இல் அப்போதைய பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. 2022-இல் 5 மத்திய ஆசிய நாடுகளின் தலைவா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். ஆனால், கரோனா சூழல் காரணமாக அவா்கள் பங்கேற்கவில்லை.

2020-இல் பிரேஸில் அதிபா் ஜெயிா் பொல்சனாரோ தலைமை விருந்தினராகப் பங்கேற்றிருந்தாா். 2016-இல் அப்போதைய பிரான்ஸ் அதிபா் பிரான்சுவா ஹொலாந்த், 2015-இல் அப்போதைய அமெரிக்க அதிபா் பராக் ஒபாமா, 2007-இல் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தலைமை விருந்தினா்களாகப் பங்கேற்றிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT