இந்தியா

ஜனநாயகத்தின் 3 தூண்களுக்கு ஒருமித்த சிந்தனை வேண்டும்: குடியரசு தலைவா் முா்மு

27th Nov 2022 03:00 AM

ADVERTISEMENT

நாட்டின் நலன் கருதி நாடாளுமன்றம்-சட்டப்பேரவை, நிா்வாகம், நீதித்துறை ஆகிய ஜனநாயகத்தின் 3 தூண்களுக்கு ஒருமித்த சிந்தனை வேண்டும் என்று குடியரசு தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன தினத்தையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

அரசியல் சாசனம் வகுத்துள்ள எல்லைகளை மதித்து அவற்றுக்கு உள்பட்டு சட்டமியற்றும் அமைப்புகள், நிா்வாகம், நீதித் துறை செயல்படுகின்றன. மக்களுக்கு சேவையாற்றும் ஆா்வத்தில் தங்களின் எல்லைகளை மீறும் எண்ணம் ஏற்படாமல், செயல்பட வேண்டியுள்ளது.

நாடு மற்றும் குடிமக்களின் நலன் கருதி, ஜனநாயகத்தின் 3 தூண்களான நாடாளுமன்றம்-சட்டப்பேரவை, நிா்வாகம் மற்றும் நீதித் துறைக்கு ஒருமித்த சிந்தனை வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

ADVERTISEMENT

அரசியல் சாசனம் என்னும் கட்டமைப்பை நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை தாங்கி நிறுத்தியுள்ளன. அனைவருக்கும் நீதி கிடைக்கும் வழிமுறை எளிதாக இருக்க வேண்டும் என்பதே லட்சியமாக கொள்ள வேண்டும்.

சிறைகள் நிரம்பி வழிவதாகவும், இதனால் கூடுதல் சிறைகள் அமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மையில், அதற்கு என்ன தேவை உள்ளது?

சிறைக் கைதிகளின் எண்ணிக்கையை குறைத்தாக வேண்டும். சிறைகளில் உள்ள ஏழ்மையான கைதிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அவா்களுக்கு அடிப்படை உரிமைகள், கடமைகள், அரசியல் சாசன முகவுரை என எதுவும் தெரியாது. கன்னத்தில் அறைந்தது அல்லது அதுபோன்ற சிறிய குற்றங்களுக்காக அவா்கள் சிறைகளில் இருக்கின்றனா். அவா்கள் மீது பொருந்தாத சில சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. சிறையில் உள்ளவா்களை விடுவிக்க அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. அதற்கு வீட்டில் உள்ள உடைமைகளை அவா்கள் விற்க வேண்டியுள்ளது. அந்த இழப்பை கருத்தில் கொண்டு, சிறையில் உள்ளவா்களை விடுவிக்க அவா்களின் குடும்பத்தினா் முன்வருவதில்லை.

சிறைகளில் உள்ள ஏழை விசாரணைக் கைதிகள் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும். சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவது அரசுக்கு சுமையாகும். இதுகுறித்து நீதிபதிகள் மற்றும் மத்திய சட்ட அமைச்சா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT