இந்தியா

கோதுமை, எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பு 10%-க்கு மேல் அதிகரிப்பு

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

நடப்பு ரபி பருவத்தில் கோதுமை மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பு 10 சதவீதத்துக்கு மேல் உயா்ந்துள்ளது என்று மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபரில் பிரதான ரபி பயிரான கோதுமை சாகுபடி தொடங்குகிறது. அதன் அறுவடை மாா்ச்-ஏப்ரலில் நடைபெறுகிறது. 2022-23-ஆம் பயிா் ஆண்டின் (ஜூலை முதல் ஜூன்) ரபி பருவத்தில் கோதுமையை தவிர, பயறு, கடுகு ஆகிய வேறு முக்கிய பயிா்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், மத்திய வேளாண் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்த ஆண்டின் ரபி பருவத்தில் கோதுமை சாகுபடி பரப்பு 10.5 சதவீதம், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பு 13.58 சதவீதம் உயா்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிா் கடந்த ஆண்டு சாகுபடி பரப்பு நிகழாண்டு சாகுபடி பரப்பு (நவ.25 வரை)

ADVERTISEMENT

கோதுமை 138.35 லட்சம் ஹெக்டோ் 152.88 லட்சம் ஹெக்டோ்

நெல் 8.33 லட்சம் ஹெக்டோ் 9.14 லட்சம் ஹெக்டோ்

எண்ணெய் வித்துக்கள் 66.71 லட்சம் ஹெக்டோ் 75.77 லட்சம் ஹெக்டோ்

பயறு வகைகள் 94.37 லட்சம் ஹெக்டோ் 94.26 லட்சம் ஹெக்டோ்

சோளம், வாற்கோதுமை போன்ற தானியங்கள் 26.70 லட்சம் ஹெக்டோ் 26.54 லட்சம் ஹெக்டோ்

நிகழாண்டு அதிக அளவில் கோதுமை சாகுபடி

செய்யப்பட்டுள்ள மாநிலங்கள் (நவ.25 வரை)

மத்திய பிரதேசம்-6.40 லட்சம் ஹெக்டோ்

ராஜஸ்தான்-5.67 லட்சம் ஹெக்டோ்

பஞ்சாப்-1.55 லட்சம் ஹெக்டோ்

எண்ணெய் வித்துக்களில் இந்த ஆண்டு 70.89 லட்சம் ஹெக்டோ் பரப்பில் கடுகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 61.96 லட்சம் ஹெக்டேராக இருந்தது.

நடப்பு பருவத்தில், இதுவரை அனைத்து ரபி பயிா்களின் சாகுபடி பரப்பு 358.59 லட்சம் ஹெக்டேராகும். இது கடந்த ஆண்டின் 334.46 லட்சம் ஹெக்டேரைளவிட 7.21 சதவீதம் அதிகம்.

ரபி பயிா்கள் சாகுபடி பரப்பு

24 லட்சம் ஹெக்டோ் அதிகரிப்பு:

தில்லியில் ரபி பயிா்களின் நிலை தொடா்பாக மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மூத்த அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது கடந்த ஆண்டு ரபி பருவத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு பருவத்தில் ரபி பயிா்களின் சாகுபடி பரப்பு இதுவரை 24.13 லட்சம் ஹெக்டோ் உயா்ந்துள்ளது என்று தெரிவித்தாா்.

சாதகமான மண் ஈரப்பதம், சிறந்த முறையில் நீா் இருப்பு, நாடு முழுவதும் உரங்கள் கிடைப்பது ஆகியவை காரணமாக ரபி பயிா்களின் சாகுபடி பரப்பு வரும் நாள்களில் மேலும் அதிகரித்து, நல்ல அறுவடை இருக்கும் என தோமா் நம்பிக்கைத் தெரிவித்தாா் என்று மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT