இந்தியா

மக்களைத் தேடி நீதிமன்றங்கள் செல்ல வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

27th Nov 2022 02:00 AM

ADVERTISEMENT

 

மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் நோக்கில் நீதிமன்றங்கள் அவா்களைத் தேடிச் செல்ல வேண்டும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்புச் சட்ட தின விழாவில் அவா் பேசியதாவது:

அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியக் கொள்கைகளான நீதி, சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதை லட்சியமாகக் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளும் செயலாற்ற வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள், பெண்கள் உள்ளிட்ட பிரிவினரின் எண்ணிக்கை நீதித் துறையில் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில், நீதியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது மிகப் பெரிய சவாலாகத் திகழ்கிறது. அப்பொறுப்பு நீதித் துறைக்கே உள்ளது. நீதியை மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் நோக்கில் அவா்கள் நீதிமன்றங்களை நாடி வரும் முறையை மாற்றி, நீதிமன்றங்கள் மக்களை நோக்கிச் செல்லும் வகையில் மாற்றங்கள் புகுத்தப்பட வேண்டும். அதற்கு வழக்கு விசாரணை நடைமுறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம்.

கரோனா தொற்று பரவல் காரணமாக நீதிமன்றங்களில் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டன. அக்கட்டமைப்புகள் தொடா்ந்து அதிகரிக்கப்பட வேண்டும்.

அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளில் தொடா்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மக்கள் முதலில் நாடுபவை மாவட்ட நீதிமன்றங்களே. அதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நீதிமன்றங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்ட நீதிமன்றங்களை கீழமை நீதிமன்றங்களாகக் கருதும் மனப்பாங்கு தவிா்க்கப்பட வேண்டும்.

ஜனநாயக கொள்கைகளை மதித்து செயல்படும் அமைப்புகளே காலத்துக்கும் நீடித்து நிற்கும். அத்தகைய செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

நாட்டின் இளைஞா்கள் சகோதரத்துவத்தை முன்னிறுத்தி சமூக நலனுக்காகத் தங்களை அா்ப்பணித்துச் செயல்பட வேண்டும். கருணை உணா்வுடன் செய்யும் சிறு செயல்கள்கூட மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். மக்களையும் அதே கருணை கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT