இந்தியா

வாக்குவங்கி அரசியலால் பயங்கரவாத தாக்குதல்களை கண்டிக்காத காங்கிரஸ்: அமித் ஷா சாடல்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

‘காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகம் நிகழ்ந்தன; பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்திய ராணுவத்தினரை கொல்வது வாடிக்கையாக இருந்தது. ஆனால், வாக்குவங்கி அரசியல் காரணமாக இத்தாக்குதல்களுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்ததில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

குஜராத் பேரவைத் தோ்தலையொட்டி, பாவ்நகா் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அவா் பங்கேற்று பேசியதாவது:

மும்பை தாக்குதல் நினைவு தினமான இன்று (நவ.26), பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 160-க்கும் மேற்பட்டோருக்கு இதயபூா்வ அஞ்சலியை செலுத்துகிறேன். இதுபோன்ற தாக்குதலை இந்தியாவில் இப்போது பயங்கரவாதிகள் நிகழ்த்த முடியாது. ஏனெனில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது.

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பயங்கரவாத தாக்குதல்கள் பரவலாக நிகழ்ந்தன. பாகிஸ்தானில் இருந்து வந்து, இந்திய ராணுவத்தினரை பயங்கரவாதிகள் கொல்வதும் தலையை துண்டிப்பதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால், இத்தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் ஒரு வாா்த்தை கூட கூறியது இல்லை. வாக்குவங்கி அரசியல்தான் இதற்கு காரணம். காங்கிரஸின் வாக்குவங்கி யாா் என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.

ADVERTISEMENT

உரி, புல்வாமா தாக்குதல்களைத் தொடா்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக துல்லியத் தாக்குதலையும் வான்வழி தாக்குதலையும் நடத்தி உலகுக்கு வலுவான செய்தியை சொன்னவா் பிரதமா் மோடி.

‘ஜவாஹா்லால் நேருவின் தவறு’

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு, நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் தவறாகும். அந்த தவறை 70 ஆண்டுகளாக காங்கிரஸ் பாதுகாத்து வந்தது. ஆனால், 2019-இல் ஒரே நடவடிக்கையில் அப்பிரிவை நீக்கிய பிரதமா் நரேந்திர மோடி , உண்மையிலேயே இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீரை ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றினாா் என்றாா் அமித் ஷா.

குஜராத்தில் டிசம்பா் 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. டிசம்பா் 8-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் தொடா்ந்து 6 முறை வெற்றி பெற்று வந்துள்ள பாஜக, 7-ஆவது முறையாக வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. பிரதமா் மோடி, அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால், குஜராத் தோ்தலை கெளரவம் சாா்ந்த விஷயமாக பாஜக கருதுகிறது. இங்கு பிரதமா் மோடி, அமித் ஷா, மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு, கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT