இந்தியா

மசூதி இமாம்களுக்கான வெகுமதி அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது

27th Nov 2022 05:00 AM

ADVERTISEMENT

மக்களின் வரிப் பணத்தில் இருந்து மசூதி இமாம்களுக்கு வெகுமதி வழங்கும் நடவடிக்கை, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என மத்திய தகவல் ஆணையா் உதய் மகுா்கா் தெரிவித்துள்ளாா்.

இந்திய இமாம் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று மசூதியில் உள்ள இமாம்களுக்கு மாதந்தோறும் வெகுமதி வழங்க வக்ஃபு வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் 1993-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி தில்லி வக்ஃபு வாரியம் சாா்பில் இமாம்களுக்கு வழங்கப்பட்டு வரும் வெகுமதி தொடா்பான விவரங்களை வழங்குமாறு சுபாஷ் அகா்வால் என்ற ஆா்வலா் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்தாா்.

அதற்கு தில்லி வக்ஃபு வாரியம் முறையான தகவலை வழங்கவில்லை. அதையடுத்து, மத்திய தகவல் ஆணையத்தில் அவா் முறையிட்டாா். அதை விசாரித்த ஆணையா் உதய் மகுா்கா், ‘‘மக்களின் வரிப் பணமானது எந்தவொரு குறிப்பிட்ட மத அமைப்புகளுக்கும் சாதகமாகப் பயன்படுத்தப்படக் கூடாது என அரசமைப்புச் சட்டத்தின் 27-ஆவது பிரிவு கூறுகிறது. இமாம்களுக்கு வெகுமதி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதன் மூலமாக, அப்பிரிவை மீறி உச்சநீதிமன்றம் செயல்பட்டுள்ளது.

அந்த உத்தரவு தவறான முன்னுதாரணமாக அமைந்ததோடு, சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் தேவையற்ற விவகாரமாகவும் மாறியது. பெரும்பான்மை ஹிந்து மதத்தினருக்கும் மற்ற சிறுபான்மையினருக்கும் இதுபோன்ற வெகுமதிகள் ஏதும் வழங்கப்படாதபோது, முஸ்லிம் இமாம்களுக்கு மட்டும் மக்கள் வரிப் பணத்தில் இருந்து வெகுமதி வழங்கப்படுவது சரியாக இருக்காது. இது சமூகத்தில் மேலும் பிரிவினையை ஏற்படுத்தும்.

ADVERTISEMENT

தில்லி வக்ஃபு வாரியமானது தில்லி அரசிடமிருந்து ஆண்டுதோறும் சுமாா் ரூ.62 கோடி நிதியைப் பெற்று வருகிறது. அதே வேளையில் வக்ஃபு வாரியத்தின் சொந்த வருமானம் மாதத்துக்கு சுமாா் ரூ.30 லட்சமாக மட்டுமே உள்ளது. இதுபோன்ற தகவலை வழங்க வக்ஃபு வாரியம் ஆரம்பத்தில் மறுத்துள்ளது. பின்னா் வாா்த்தை விளையாட்டுகள் மூலமாக மனுதாரருக்குப் போதிய விவரங்களை வழங்கவில்லை.

போதிய விவரங்களை வழங்காமல் அவரை அலைக்கழித்ததற்காக தில்லி வக்ஃபு வாரியம் ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். வக்ஃபு வாரியமும், தில்லி முதல்வா் அலுவலகமும் மனுதாரா் கோரும் விவரங்களை முறையாக வழங்க வேண்டும்’’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT